தொழிலாளருக்கு கைகொடுத்த சுற்றுலா வாகனங்கள்
திருப்பூர் : தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் புறப்பட்ட வெளி மாவட்டத்தினருக்கு சுற்றுலா வாகனங்கள் பெருமளவு கைகொடுத்தன.நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருப்பூரில் தங்கிப் பணியாற்றும் வெளி மாவட்டங்களைச்சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு கடந்த இரு நாட்களாக புறப்பட்டுச் சென்ற வண்ணம் உள்ளனர். திருப்பூரிலிருந்து வெளி மாவட்டத்தினர் வசதிக்காக பல்வேறு பகுதிகளுக்கும் அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது.இந்நிலையில், முக்கியமான பகுதிகள் தவிர வெளி மாவட்ட தலைநகரங்களிலிருந்து தள்ளி அமைந்துள்ள ஊர்களுக்கு அதிகளவிலானோர் பயணித்தனர். இவர்களுக்கு சிறப்பு பஸ்களை விட திருப்பூரிலிருந்து சென்ற சுற்றுலா வாகனங்கள் பெரும் உதவியாக இருந்தது.கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் அருகே, வரிசை கட்டி நின்ற சுற்றுலா வாகனங்கள் வெளி மாவட்டங்களின் பிற பகுதிகளுக்கும் பயணிகளை ஏற்றிச் சென்றன.அரசு பஸ்கள் அதிகளவிலான பயணிகளை ஏற்றிக் கொண்டும் பல்வேறு பகுதிகள் வழியாகவும் செல்லும் என்பதால் பலரும் இது போன்ற சுற்றுலா வாகனங்களில் பயணிக்க ஆர்வம் காட்டினர். பயண நேரம் மற்றும் அலைச்சல் குறைவு என்பதாலும், வசதியாக பயணிக்கும் வகையில் இவற்றில் பலரும் புறப்பட்டுச் சென்றனர்.