பி.ஏ.பி.,யில் டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் பலி: மற்றொருவர் மாயம்
பல்லடம் : பல்லடம், கேத்தனுார் - மந்திரிபாளையத்தை சேர்ந்த தங்கவேல் 40. அதே பகுதியை சேர்ந்த குப்பன் 50, வீரன், 35 மற்றும் எஸ்.அய்யம்பாளையத்தை சேர்ந்த மணி, 35 என நான்கு பேரும், செஞ்சேரிமலை அருகே மந்த்ராசலம் என்பவரின் தோட்டத்தில் இருந்து, டிராக்டரில், மாட்டு சாணங்களை ஏற்றிக்கொண்டு செல்லமுத்து என்பவரின் தோட்டத்துக்கு புறப்பட்டனர்.டிராக்டரை குப்பன் ஓட்ட, செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி., வாய்க்கால் செல்லும் ரோட்டில் திரும்பும்போது, டிராக்டர் நிலை தடுமாறி வாய்க்காலுக்குள் பாய்ந்தது. இதில், தப்பிக்க முயன்ற தங்கவேல், டிராக்டரில் இருந்து குதித்தார்.இதில், அவரது இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது. மணி, பி.ஏ.பி., வாய்க்கால் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். வாய்க்காலுக்குள் விழுந்த குப்பன், வீரன் ஆகியோர் கூச்சலிட்டரை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டதால், காயங்களுடன் தப்பித்தனர்.படுகாயம் அடைந்த தங்கவேல், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். நீரில் அடித்துச் செல்லப்பட்ட மணி என்பவரை தீயணைப்பு படை வீரர்கள் தேடி வருகின்றனர்.கிரேன் உதவியுடன் வாய்க்காலில் இருந்து டிராக்டர் வெளியே எடுக்கப்பட்டது. சுல்தான்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.