உழவர் சந்தையில் வியாபாரிகள் ஆதிக்கம்; குறைதீர் கூட்டத்தில் புகார்
உடுமலை; உழவர் சந்தையில் வியாபாரிகள் ஆதிக்கம் செலுத்தும் பிரச்னைக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, குறை தீர் கூட்டத்தில், விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம், கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் குமார் தலைமை வகித்தார். வேளாண், பொதுப்பணித்துறை உள்ளிட்ட அலுவலர்கள், கூட்டத்தில் பங்கேற்றனர்.கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:பெரியசாமி: உடுமலை, குடிமங்கலம் சுற்றுப்பகுதியில் உள்ள தென்னை நார் தொழிற்சாலைகளில், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதில்லை. இதனால் சுற்றுப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு சுவாச நோய்கள் ஏற்படுகிறது.அருகில் உள்ள விளைநிலங்களும் இப்பிரச்னையால் பாதிக்கப்படுகிறது. நிலுவையில் உள்ள ஆனைமலை - நல்லாறு திட்டத்தை அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டும்.உழவர் சந்தை செயல்படும் நேரத்தில், வியாபாரிகளும் சந்தை மற்றும் வெளிப்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டு விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.செந்தில்குமார்: வாளவாடி பகுதியில், பி.ஏ.பி., கிளை வாய்க்காலில் தொடரும் தண்ணீர் திருட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இது குறித்து புகார் அளித்தாலும், புகார் செய்பவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.தண்ணீர் திருட்டு உறுதிப்படுத்தப்பட்டும், சம்பந்தப்பட்ட நபரை கருப்பு பட்டியலில் சேர்க்காமல் விட்டுள்ளனர். பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. வாளவாடி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருப்பதில்லை.அலுவலர் இல்லாததால், பொதுமக்கள் தான் அதிகமாக அலைக்கழிக்கப்படுகின்றனர்.வாளவாடியில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் அருகிலுள்ள ரோடு ஆக்கிரமிப்பை முறையாக அகற்ற வேண்டும்.தங்கராஜ்: எலையமுத்துார் பகுதியில், நிபந்தனை பட்டா இடங்களை, தனியார் நிறுவனம் தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது. அதை பயன்படுத்த பொதுமக்களை விடாமல் அச்சுறுத்தும் வகையில், அந்த நிறுவனம் நடந்துகொள்கிறது.கோட்டாச்சியர் குமார் கூறியதாவது:உழவர் சந்தையில், விவசாயிகள் அடையாளத்தில் விற்பனை செய்யும் வியாபாரிகள் குறித்து முறையான புகார் அளிப்பதன் பெயரில் நடவடிக்கை எடுக்கப்படும்.சந்தை நேரத்தில் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த, நகராட்சி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்படும். வாளவாடியில் உள்ள ரோடு ஆக்கிரமிப்பு குறித்து, முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கூறினார்.