நெடுஞ்சாலையில் தாறுமாறு; போக்குவரத்து பாதிப்பு
பல்லடம்; பல்லடம், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில், கொச்சி செல்லும் மாநில நெடுஞ்சாலை பிரிகிறது. நேற்று மாலை, தனியார் பள்ளி வாகனங்கள், கொச்சி ரோட்டில் இருந்து, மேற்கு பல்லடம் நியூ எக்ஸ்டன்ஷன் சாலையில் திரும்புவதற்காக, எதிர் திசையில் வந்தன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட, வாகன ஓட்டிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.இதற்கிடையே, கும்ப கோணத்தில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பஸ்சும், காரும் உரசிக்கொண்டன. இதில், இருதரப்பினரும் வாகனங்களை நிறுத்தியபடி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருபுறம், எதிர் திசையில் வந்த பள்ளி வாகனங்களால் நெரிசல் ஏற்பட, மற்றொருபுறம், அரசு பஸ்சும்,- காரும்உரசி கொண்ட சம்பவத்தாலும், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.எதிர் திசையில் வந்த பள்ளி வாகனங்கள், ரிவர்ஸ் எடுத்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றன. அரசு பஸ் ஓட்டுனரும் கார் உரிமையாளரும், நடுரோட்டிலேயே வாகனங்களை நிறுத்தியபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவங்களால், தேசிய நெடுஞ்சாலையில், 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கொச்சி ரோட்டில் இருந்து மேற்கு பல்லடம் செல்லும் பெரும்பாலான வாகனங்கள், விதிமுறை மீறி அடிக்கடி எதிர்திசையில் செல்கின்றன. இதனால், இப்பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து போலீசாரை நியமித்து இப்பகுதியில் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.