உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முதல் நாளிலேயே திணறல்! பலனளிக்காத போக்குவரத்து மாற்றம்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

முதல் நாளிலேயே திணறல்! பலனளிக்காத போக்குவரத்து மாற்றம்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

திருப்பூர்: திருப்பூர் பார்க் ரோட்டில் சுரங்க பாலம் பணிக்காக போக்குவரத்து மாற்றங்களை நேற்று முதல் மாற்றம் செய்தனர். எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்காமல் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. திருப்பூர் பார்க் ரோட்டில் சுரங்கப்பாதை பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பால பணிகள் அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது. இதனால், பணிகள் தொடர்ந்து நடக்க போக்குவரத்து மாற்றங்களை செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதில், எவ்வித பிரச்னையும் இல்லையென்று போலீசார் உறுதி கூறிய பின்னர் தான், பாலம் கட் டுமானப்பணி அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல முடியும். இந்நிலையில், போலீசார் அறிவித்தபடி, போக்குவரத்து மாற்றம் காலை முதல் அமலுக்கு வந்தது. இந்த மாற்றம் காரணமாக மங்கலம் ரோடு, நடராஜர் தியேட்டர் ரோடு பகுதியில் வாகனங்கள் நெரிசலில் சிக்கி நீண்ட துாரம் காத்திருந்தது. இதனால், மீண்டும் பழைய முறைப்படியே மாற்றி விட்டனர். அதன்பின், குமரன் ரோட்டில் நெரிசல் ஏற்பட ஆரம்பித்து விட்டது. போலீசார் மேற்கொண்ட போக்குவரத்து மாற்றத்தால், எந்தந்த இடங்களில் நெருக்கடி ஏற்படுகிறது. அதனை எப்படி மாற்றி அமைக்கலாம் என்று ஆலோசனை செய்து வருகின்றனர். போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதை பார்க் ரோட்டில் திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேற்று காலை ஆய்வு செய்தார். வாகனங்கள் நெருக்கடி இல்லாமல் செல்லும் வகையில், என்னவெல்லாம் செய்யலாம் என்று ஆலோசனை செய்தார். ஒன்றிரண்டு நாட்கள் போக்குவரத்து குறித்து கண்காணித்து மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளனர். இவை எதுவும் கைகூடவில்லையென்றால், பழைய முறைப்படி அமைக்கும் முடிவிலும் உள்ளனர். கண்காணிக்க முடிவு திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது: சுரங்க பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. டவுன்ஹால் வரை போக்குவரத்து மெதுவாக தான் உள்ளது. முதல் நாள் என்பதாலும், ஒன்றிரண்டு நாட்கள் கண்காணிக்க உள்ளோம். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்யப்படும். மங்கலம் ரோட்டில் இருவழியாக மாற்றியபின் நெருக்கடி ஏற்பட்டதால், பழைய முறைப்படி ஒரு வழியாக மாற்றினோம். அந்த ரோட்டில் மாற்றம் செய்த பின், குமரன் ரோட்டில் நெரிசல் ஏற்பட ஆரம்பித்து விட்டது. போக்குவரத்து மாற்றம் கைகொடுத்தால் தான், சுரங்கப்பாலம் கட்டுமான பணி ஆரம்பிக்க முடியும். அனைத்து விதமாகவும் திட்டமிடப்படுகிறது. கனரக வாகனங்கள் குமரன் ரோடு செல்லாமல், ஊத்துக்குளி ரோட்டில் சென்று, 2வது ரயில்வே கேட் வழியாக செல்லுமாறு கூறியுள்ளோம். ஓரிரு நாட்கள், கண்காணித்த பின்னரே, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார். போக்குவரத்து மாற்றம் மேம்படுத்துதலில், பொதுமக்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால், 94981 81078 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால், இதுவரை மக்கள் தரப்பில் எவ்வித கருத்தும் வரவில்லை. அதேநேரத்தில், போலீசாரிடம் தங்கள் கருத்துக்களை தெரிவிக்காத மக்கள், சமூக வலைதளங்களில் மாற்றம் குறித்து விமர்சித்தும், அப்படி செய்திருக்கலாம், இப்படி செய்திருக்கலாம் என்று கருத்துக்களை பதிவு செய்து வேடிக்கையாக உள்ளது. எனவே, சமூக வலைதளத்தில் மட்டும் ஆலோசனை சொல்வதை கைவிட்டு, போலீசாரிடம் நேரடியாக தெரியப்படுத்தலாம். அதேபோல், போக்குவரத்து மாற்றங்களை செய்யும் முன், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள குண்டும், குழியுமான ரோடுகளை சரி செய்ய வேண்டும். இவற்றை மேற்கொள்ளாமல், மேற்கொள்ளப்படும் எந்த மாற்றமும் பலனளிக்காது என பொதுமக்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
நவ 02, 2025 06:31

போலீஸ் டிபார்ட்மென்ட்டிலாவது கோட்டா இல்லாமல் தகுதி சார்ந்து பனியிலெடுங்கள் தமிழக அரசே , பொதுமக்களுக்கு எப்படியெல்லாம் சிக்கல் வரும் என்பதனை கூட யோசிக்க முடியாத லெவெலில் அரசு ஊழியர்கள்


புதிய வீடியோ