தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி
திருப்பூர்; பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க மாணவ, மாணவியரை இப்போதிருந்தே தயார் படுத்த எத்தகைய பயிற்சி அளிக்க வேண்டும் என்பது குறித்து மொழித்தாள், முக்கிய பாடப்பிரிவு ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.கடந்த, 2022 - 2023ம் கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவில், 11வது இடம் பெற்ற திருப்பூர் கல்வி மாவட்டம், கடந்தாண்டு, பத்து இடங்கள் பின்தங்கி, 21வது இடம் பெற்றது. பிளஸ் 2 தேர்வு முடிவில் முதலிடம் பெற்ற திருப்பூர், பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், பத்து இடங்கள் பின் தங்கியதால், வரும், 2025 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இப்போதே தயாராகி விட்டது, மாவட்ட கல்வித்துறை.ஏப்ரலில் நடக்கவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவது எப்படி என்பது குறித்து, ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வித்துறை சார்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. உடுமலை எஸ்.கே.பி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த டிச., 12ம் தேதி தமிழ், தேர்வுக்கான பயிற்சி துவங்கியது; தமிழாசிரியர்கள் பங்கேற்றனர்; தமிழ் பாடத்துக்கான கருத்தாளர்கள் பயிற்சி வழங்கினர்.இதில், மெல்ல கற்கும் மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பது; பாடத்தில், 100 சதவீத தேர்ச்சியை எட்டுவது, ஆர்வமுள்ள மாணவர்களை சென்டம் பெற செய்வது உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்பட்டது.நேற்று நடக்கவிருந்த பயிற்சி, மழை காரணமாக வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வரும் நாட்களில் அறிவியல், கணிதம் பாடங்களுக்கான பயிற்சி, அப்பிரிவு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளது என மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.