ஓய்வுபெற்ற ஊழியர்களுடன் இணைந்து போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
திருப்பூர்; அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி பணி ஓய்வு பெற்ற ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராடிவருகின்றனர். நேற்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மண்டல அலுவலகங்கள் முன்புறம் காத்திருப்பு போராட்டத்தை சி.ஐ.டி.யு., சங்கம் அறிவித்துள்ளது. இதில், 15வது ஊதிய ஒப்பந்தப்படி 20 மாத நிலுவைத் தொகை வழங்க வேண்டும், 2003ம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளிக்கு ஓய்வூதியம், பணியின் போது இறந்த தொழிலாளிக்கு குடும்ப ஓய்வூதியம், பணியில் உள்ள தொழிலாளிக்கு நிலுவையில் உள்ள டி.ஏ., உயர்த்த வேண்டும், 25 மாத நிலுவையில் உள்ள ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு பணப்பலன்கள்; ஓய்வூதியர்களுக்கு ஒப்பந்த பலன் உள்ளிட்டவை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை வலியுறுத்தி, பணியாற்றும் ஊழியர்கள் - ஓய்வு பெற்றோர் இணைந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓய்வு பெற்ற அமைப்பின் தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். போராட்டத்தை சி.ஐ.டி.யு., மாநில உதவி செயலாளர் கோபிக்குமார் துவக்கி வைத்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட உதவி தலைவர் உண்ணிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர். இதில் திரளானோர் பங்கேற்றனர்.