ராஜகோபுரத்தில் மரம் வளர்ப்பு
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், ராஜகோபுரத்தில், பறவைகள் எச்சமிடுவதால், அதிக அளவு செடிகள் முளைத்துள்ளன; சிறிய மரக்கன்று களும் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக, கோபுரத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழை பெய்த பின், செடிகள் சிறிய அளவில் முளைத்ததும், அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். மாறாக, அப்படியே விடுவதால், பெரிய செடியாக வளர்ந்து விடுகின்றன. இதனால், கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டு, அதன் ஸ்திரத்தன்மை பாதிக்கும் அபாயம் உள்ளது.எனவே, இது விஷயத்தில், கட்டட பொறியாளர்களை அழைத்துப்பேசி, கோபுரத்தில் உள்ள செடிகளை உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.