உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உயிர் பயத்தில் பழங்குடி மக்கள்  இடிந்து விழும் வீடுகளால் தவிப்பு 

உயிர் பயத்தில் பழங்குடி மக்கள்  இடிந்து விழும் வீடுகளால் தவிப்பு 

உடுமலை: உடுமலை அருகே மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்கள், இடிந்து விழும் வீடுகளால், திறந்தவெளியில் வசிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், 13 மலை கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு, 1980ல் தமிழக அரசு சார்பில் வீடுகள் கட்டித்தரப்பட்டன.

திறந்தவெளி

இதில், பெரும்பாலான வீடுகள் தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. கடந்தாண்டு பெய்த தொடர்மழை காரணமாக, உடுமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட கோடந்துார், திருமூர்த்திமலை குடியிருப்புகளிலுள்ள வீடுகள் அதிகம் சேதமடைந்தன.வீடுகள், எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், அச்சத்துடன் திறந்தவெளியில் இரவு நேரங்களில் படுத்து உறங்குகின்றனர்.கடந்தாண்டு வீடுகள் சேதமடைந்த போது, வனத்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டு, இரு குடியிருப்புகளிலும், 110 வீடுகளை புதுப்பித்து தர பழங்குடியினர் நல ஆணையம் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது.

நிதி ஒதுக்கீடு

இதுகுறித்து, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க திருப்பூர் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் கூறுகையில், “திருமூர்த்திமலை மலை கிராமத்தில், புதிதாக 91 வீடுகள் கட்டித்தர, 5 கோடியே 27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தினர் கடந்தாண்டு தெரிவித்தனர். ''இதுவரை வீடுகள் கட்டித்தர எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு மழை சீசன் போதும், வீடுகள் இடிந்து மக்கள் காயமடைகின்றனர். உயிரிழப்பு ஏற்படும் முன், புதிய வீடுகள் கட்டித்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
ஜூலை 14, 2025 10:54

நாப்பது வருசமா ஒரு பத்து பைசா செலவழிச்சு பெயிண்ட் கூட அடிச்சிருக்க மாட்டாங்க. இடியாம என்ன செய்யும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை