கனிம வளம் ஏற்றி சென்ற லாரிகளை பிடித்து விசாரணை
உடுமலை; கேரளாவுக்கு கனிம வளங்கள் ஏற்றிச்சென்ற லாரிகளை, குடிமங்கலம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் இருந்து கனிமவளங்கள் அதிகளவு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக, தொடர் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக, மடத்துக்குளம் பகுதியில் இருந்து, கேரளாவுக்கு நாள்தோறும், நுாற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில், விதிகளை மீறி, கருங்கற்கள், ஜல்லி ஏற்றிச்செல்கின்றனர்.கனிம வள கடத்தல் குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.இந்நிலையில், நேற்று மாலை, உடுமலை - பல்லடம் மாநில நெடுஞ்சாலையில், குடிமங்கலம் போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அவ்வழியாக கனிம வளங்களை ஏற்றி வந்த, கே.எல்., 40 டி 9745; கே.எல்., 63 ஜெ 6879; கே.எல்., 40 எஸ் 9745 மற்றும் டி.என்., 47 பிவி 5513 பதிவெண்ணுடைய லாரிகளை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு பிடித்து சென்றனர்.போலீசார் கூறுகையில், 'மடத்துக்குளம் பகுதியில் இருந்து கனிம வளங்கள் ஏற்றி வந்த லாரிகளை பிடித்து விசாரித்து வருகிறோம். அதிக எடை ஏற்றி வந்தது; பர்மிட் உள்ளிட்ட விபரங்கள் குறித்து விசாரிக்கப்படுகிறது. விசாரணை அடிப்படையில், கனிமவளத்துறை, வட்டார போக்குவரத்து துறை வழிகாட்டுதல்கள் பெறப்பட்டு, அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்,' என்றனர்.