உதயநிதி வருகை; பல்லாங்குழி சாலைகளுக்கு விமோசனம்
திருப்பூர்; திருப்பூரில் 'ஸ்மார்ட் சிட்டி', பாதாள சாக்கடை திட்டம், 'அம்ரூத்' திட்டம், நான்காவது குடிநீர் திட்டம் ஆகிய பணிகள் நடந்தது. அதற்காக, அனைத்து பகுதி ரோடுகளிலும் குழி தோண்டி சேதப்படுத்தப்பட்டது.பகிர்மான குழாய் பதிப்பு பணியும் நடந்து வருவதால், உடனுக்குடன் குழிதோண்டிய ரோட்டுக்கு 'பேட்ஜ் ஒர்க்' செய்யும் நிலை இல்லை. பல்வேறு ரோடுகள், நீண்ட நாட்களாக பல்லாங்குழிகளாக காட்சியளிக்கின்றன; மழை காலங்களில், பள்ளங்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன. தாராபுரம் ரோட்டில், பல்லடம் ரோடு சந்திப்பு முதல், கோட்டை மாரியம்மன் கோவில் வரை, ரோட்டின் தெற்கு பகுதியில், குழி தோண்டப்பட்டது.தேசிய நெடுஞ்சாலை என்று கூறி, ரோடு சீரமைப்பு பணி பல மாதங்களாக நடக்கவில்லை. நகரின் முக்கிய பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ரோடு, மண்ரோடாக காட்சியளித்தது; மழை பெய்த நேரங்களில், அவ்வழியாக செல்வது சிரமமாக இருந்தது.வளர்ச்சி பணிகள் ஆய்வுக்காக, துணை முதல்வர் உதயநிதி இன்று திருப்பூர் மாவட்டம் வருகிறார்; அதற்காக, துணை முதல்வர் வந்துசெல்லும் ரோடுகள், இரவு, பகலாக சீரமைக்கப்பட்டன; மையத்தடுப்பில், கருப்பு -வெள்ளை பெயின்ட் அடித்து பொலிவுபடுத்தப்பட்டது; எரியாத தெருவிளக்குகள் மாற்றப்பட்டன.அதன் ஒருபகுதியாக, மண்ரோடாக மாறிப்போயிருந்த தாராபுரம் ரோட்டுக்கும் விமோசனம் கிடைத்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி, 'பேட்ஜ் ஒர்க்' செய்து சீரமைத்தனர். பல மாதங்களாக சிரமப்பட்டு வந்த மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதேபோல் பல்வேறு ரோடுகளும் சீராகியுள்ளன.