அருவியில் குறையாத வெள்ளப்பெருக்கு; பக்தர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்
உடுமலை; மலைத்தொடரில் பெய்து வரும் தொடர் மழையால், பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டது; அமணலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து பக்தர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். உடுமலை அருகே திருமூர்த்திமலையில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவியில், நேற்று முன்தினம் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று காலை முதல் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டது. மலை அடிவாரத்தில், மழை இல்லாததால், அமணலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று காலை பூஜைகள் துவங்கி, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், குருமலை, குழிப்பட்டி பகுதியில் காலை 9:00 மணிக்கு மேல் கனமழை பெய்தது. மழை குறித்து, கோவில் பணியாளர்களுக்கு மலைவாழ் கிராம மக்கள் தகவல் கொடுத்தனர். மழையால், பஞ்சலிங்க அருவி மற்றும் தோணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து, கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் அருகிலுள்ள ஆற்றில் குளித்து கொண்டிருந்தவர்கள், பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். கோவில் பணியாளர்கள் சுற்றுப்பகுதியில் ரோந்து சென்று, அனைவரையும் பாதுகாப்பாக வெளியேறுமாக அறிவுறுத்தினர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளதால், கோவிலில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.