யூனியன் பாங்க் ஆப் இந்தியா 107வது நிறுவன நாள் விழா
திருப்பூர்: யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 107 வது நிறுவன நாள், திருப்பூர் பிராந்திய அலுவலகத்தின் சார்பில், ஐஸ்வர்யம் மஹாலில் நடைபெற்றது. விழாவுக்கு, ராயல் கிளாசிக் குழுமத்தின் நிறுவனர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்து பேசினார். யூனியன் வங்கியின் திருப்பூர் பிராந்திய மேலாளர் செல்லதுரை பேசுகையில், ''1919ல், மும்பையில் ஒரு சிறிய கிளையிலிருந்து துவங்கிய யூனியன் வங்கி, இன்று நாட்டின் நம்பிக்கையை சுமக்கும் பெருமைமிக்க நிதி நிறுவனமாக வளர்ந்துள்ளது. இன்று 8,655 கிளைகள், 4 வெளிநாட்டு கிளை, 9,064 ஏ.டி.எம்.கள், 25 ஆயிரத்து 700 வணிகத் தொடர்பாளர்கள், 74 ஆயிரத்து 200 ஊழியர்களுடன் ரூபாய், 22.10 ட்ரில்லியன் வணிகத்துடன் நாட்டின் 5வது மிகப்பெரிய வங்கியாக வளர்ந்துள்ளது. கடந்த, 107 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடனும் சேவை மனப்பான்மையுடனும் புதிய தொழில்நுட்பங்களை முன்னெடுத்து செல்வதில் கவனத்துடனும் செயல்பட்டு மக்களின் நம்பிக்கையை பெற்று வெற்றிகரமாக இயங்கி வருகிறது. திருப்பூர் பிராந்தியத்தில் ஏற்றுமதி, வணிகம், மஞ்சள், விவசாயம், கைத்தறி, தொழில் முனைவோர், மத்திய அரசின் நிதி உட்புகுத்தும் திட்டங்கள் என பல வகைகளில் முன்னிலை வகிக்கிறது,'' என்று பேசினார். முன்னதாக, ராயல் கிளாசிக் மில்ஸ் கோபாலகிருஷ்ணன், திருப்பூர் சாய ஆலைகள் சங்க தலைவர் காந்திராஜன், பாரடைஸ் மில்ஸ் குழுமம் மீனாட்சி சுந்தரம் மற்றும் பலர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர்.