பயனற்ற கால்வாய் ரூ.6.50 லட்சம் வீண்
திருப்பூர்,: திருப்பூர் அருகே, 6.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சாக்கடைக்கால்வாய் பயனின்றி உள்ளது.பதினைந்தாவது நிதிக்குழு மானிய நிதியில், திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சின்னப்புத்துார் ஆதிதிராவிடர் காலனியில் இருந்து, கிழக்கே பெரியபுத்துார் ஆதிதிராவிடர் காலனி வரை கால்வாய் அமைத்து, ஏற்கனவே உள்ள கால்வாயுடன் இணைக்க திட்டமிடப்பட்டது. 2020 - 21ம் ஆண்டு நிதியில், 2.50 லட்சம் மற்றும் நான்கு லட்சம் என, இரண்டு திட்டமாக, 6.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. பெரியபுத்துார் ரேஷன் கடை வரை கால்வாய் அமைத்த பிறகு, பெரியபுத்துார் ஆதிதிராவிட காலனி மக்கள், சின்னப்புத்துாரில் இருந்து வரும் கால்வாயை இணைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் சாக்கடை கால்வாய் கட்டும் பணி பாதியில் கைவிடப்பட்டது; 'டிஸ்போஷல் பாயின்ட்' இல்லாததால், மக்கள் இதுவரை பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் கட்டிய கால்வாய் சில இடங்களில் சேதமாகியும் காணப்படுகிறது. ----பயனில்லாமல் போன சாக்கடைக் கால்வாய்.இடம்: பெரியபுத்துார்.
கால்வாயை, செங்கரைப்பள்ளம் கால்வாய் வரை நீட்டிக்க வேண்டும். பழைய கால்வாயை புதுப்பித்து, புதிய கால்வாயை இணைக்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளும், பணிகளை தேர்வு செய்யும் முன், சரிவர திட்டமிட்டு பணிகளை தொடர அனுமதிக்க வேண்டும். வசந்தம் நகர் உட்பட, பல்வேறு இடங்களில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாத நிலையில், சரியான திட்டமிடல் இல்லாமல் கட்டிய கால்வாயும் மக்களுக்கு பயனில்லாமல் கிடக்கிறது.
- பொதுமக்கள்.