மக்களை நல்வழிப்படுத்தவே வேதங்கள்!
திருப்பூர்; 'மக்களை நல்வழிப்படுத்தவே வேதங்கள் இயற்றப்பட்டன,' என ஐயப்பன் கோவில் மண்டல பூஜை விழா சொற்பொழிவில் கருத்து தெரிவிக்கப்பட்டது.திருப்பூர், காலேஜ் ரோடு, ஸ்ரீ ஐயப்பன் கோவில், 65வது ஆண்டு மண்டல பூஜை விழா, கடந்த, 16ம் தேதி மகா கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. தினமும் மாலை, ஆன்மிக சொற்பொழிவு, பஜனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.நேற்று முன்தினம் மாலை, 6:45 மணிக்கு டாக்டர். உமா மகேஸ்வரி, 'ஸ்காந்த புராணம்' என்ற தலைப்பில் பேசியதாவது:திருப்பூர், தொழில் நகரம் மட்டுமின்றி, சிறந்த ஆன்மிக பூமியாகவும் உள்ளது. ஐயப்பன் கோவில்களில் ஆன்மிக சொற்பொழிவு நடப்பது, பெருமைப்படக் கூடிய விஷயம். நம் பாரத பூமி, புனிதம் பெற்றது. ஏராளமான ஆன்மிக பெரியோர்கள், சான்றோர்கள் வாழ்ந்துள்ளனர்.மக்களை நல்வழிப்படுத்த வேதங்களை இயற்றினர். அதில் உள்ள கருத்துகள் சாதாரண, வெகு ஜன மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தான், அவை இதிகாசங்களாக எழுதப்பட்டன.அறம் சொல்லும் வழியில் நின்று, அதன்படி வாழ வேண்டும் என்பதை போதிப்பதும், எதனை செய்யக் கூடாதோ அதை செய்யாமல் இருக்க வேண்டும் என்பதை போதிப்பதும் தான் கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள். வேதங்களும், ஏட்டளவில் பாதுகாக்க மட்டும் எழுதி வைக்கப்பட்டதல்ல; மாறாக, அதில் உள்ள கருத்துகள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தான் எழுதப்பட்டன.ஸ்காந்த புராணத்தில் இல்லாதது, வேறெந்த புராணத்திலும் இருக்காது என சொல்வார்கள். அந்த வகையில் ஸ்காந்த புராணத்தில், வாழ்க்கையின் அனைத்து தத்துவங்களும் எழுதப்பட்டுள்ளன. எனவே, இதிகாசங்களை, நம் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.