உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மே மாதம் உழவர் சந்தைகளில் ரூ.11 கோடி காய்கறி விற்பனை

மே மாதம் உழவர் சந்தைகளில் ரூ.11 கோடி காய்கறி விற்பனை

திருப்பூர்,: திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தைகளில் மே மாதம் 11.10 கோடி ரூபாய்க்கு காய்கறி வர்த்தகம் நடந்துள்ளது.மாநிலத்தில் இரண்டாவது பெரிய உழவர் சந்தையாக தெற்கு உழவர் சந்தை உள்ளது. இந்த சந்தை மற்றும் வடக்கு உழவர் சந்தை இரண்டிலும், கடந்த மே மாதத்தில், 11.10 கோடி ரூபாய்க்கு காய்கறி விற்பனை நடந்துள்ளது.திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள வடக்கு உழவர் சந்தையில், மே மாதத்தில், 861 மெட்ரிக் டன் காய்கறி விற்பனையாகியுள்ளது; இதன் மூலம், 3.21 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது.விளைபொருட்களை, 3,323 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். வாடிக்கையாளர்களாக, ஒரு லட்சத்து, 7 ஆயிரத்து, 690 பேர் பேர் வருகை புரிந்துள்ளனர்.மாநிலத்தில் காய்கறி வரத்து, விற்பனையில், ஒசூர் உழவர் சந்தைக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் திருப்பூர் தெற்கு உழவர் சந்தை உள்ளது. சராசரியாக, 75 டன் காய்கறி வரத்தாக உள்ளது. தெற்கு உழவர் சந்தையில், மே மாதத்தில், 2,235 டன் காய்கறி வரத்தாக இருந்தது. காய்கறி, பழங்கள், கீரை வகை என பல்வேறு விதமான விளை பொருட்களுடன், 7,364 விவசாயிகளும், 1.31 லட்சம் வாடிக்கையாளர்களும் சந்தைக்கு வருகை புரிந்தனர். 31 நாட்களில், 7.89 கோடி ரூபாய்க்கு காய்கறி விற்பனையாகியுள்ளது. மே மாதம் வடக்கு மற்றும் தெற்கு இரண்டு சந்தைகளுக்கும் சேர்த்து, 11.10 கோடிக்கு காய்கறி வர்த்தகம் நடந்துள்ளது.

லாபம் இல்லையே!

முந்தைய மாதத்தோடு ஒப்பிடுகையில் உழவர் சந்தைக்கான காய்கறி வரத்து உயர்ந்துள்ளது. அதே நேரம், எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. 50 நாட்களுக்கு மேலாக தக்காளி விலை கிலோ, 15 - 25 என்ற நிலையிலே தொடர்கிறது. அவரை, பீன்ஸ் தவிர பெரும்பாலான காய்கறிகளின் விலை கிலோ, 50 ரூபாயை தாண்டவில்லை.அக்னி நட்சத்திரம், கோடை வெயில் தாக்கத்தால், உயருமென எதிர்பார்க்கப்பட்ட எலுமிச்சை விலை அப்படியே தலைகீழாக மாறி, கிலோ, 110 ரூபாய்க்கு வந்து விட்டது. பீர்க்கன், பாகற்காய், கிலோ, 50 ரூபாய்க்கு விற்று ஆறுதல் தந்தாலும், சுரைக்காய், புடலங்காய், முள்ளங்கி, முட்டைக்கோஸ், மேராக்காய் விலை உயரவில்லை. கடந்த மாதத்தை விடவும், வெங்காயம், உருளைக் கிழங்கு விலையும் குறைந்து விட்டதால், லாபம் இல்லை. வர்த்தகம் நடந்துள்ளது; எங்களுக்கு எதிர்பார்த்த லாபம் இல்லை. பள்ளி, கல்லுாரி திறப்பால் வர்த்தகம் அதிகரித்தால், விலை உயரும் என எதிர்பார்த்துள்ளோம்.- விவசாயிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை