வாகனங்களில் திருடும் நபர் கேமராவில் அகப்பட்டார்
திருப்பூர்; வாகனங்களில் வைக்கும் பொருட்களை திருடும் ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.திருப்பூர், போயம்பாளையம், அவிநாசி நகர் பகுதியை சேர்ந்த சையது முகமது மகன் சஜீர் முகமது, 31. அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையில் பணிபுரிகிறார்.இவர் தனது நண்பர் நிவாஸ் ராஜாவுடன் ரம்ஜான் பண்டிகைக்காக குடும்பத்தினருக்கு துணிகள் வாங்க கடந்த, 2 நாள் முன் திருப்பூர் டவுன்ஹாலில் உள்ள துணிக்கடைக்கு சென்றுள்ளனர்.இருவரும் சேர்ந்து, 10 ஆயிரம் ரூபாய்க்கு துணி எடுத்துள்ளனர். அதன்பின், அங்கிருந்து டூவீலரில் பங்களா ஸ்டாப்பில் உள்ள மற்றொரு துணிக்கடையில், துணி எடுப்பதற்காக சென்றனர்.ஏற்கனவே வாங்கி வைத்திருந்த துணிபேக்கை டூவீலரில் வைத்து உள்ளே சென்றுள்ளனர். கடையில் இருந்து வெளியே வந்து பார்க்கும் போது டூவீலரில் ஏற்கனவே வைக்கப்பட்டு இருந்த துணி பேக்கை மர்ம நபர்கள் யாரோ எடுத்துச் சென்றது தெரியவந்தது. திருப்பூர் வடக்கு போலீசாரிடம் இருவரும் புகார் அளித்தனர்.அதன்பின், கடைகளில் இருந்த 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்த போது, ஒருவர் துணி பேக்கை திருடும் காட்சி பதிவாகியுள்ளது. மேலும் அந்த நபர் அருகில் இருந்த வாகனங்களில் உள்ள பொருட்களை திருடும் காட்சியும் பதிவாகியுள்ளது.இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக் குப்பதிவு செய்து, பொருட்களை திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.