மேலும் செய்திகள்
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தணிக்கை
18-Mar-2025
அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில், மாவட்ட ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இருப்பு சரிபார்க்கப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன.தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளது. பேலட் யூனிட், கன்ட்ரோல் யூனிட், வி.வி., பேட் அடங்கிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சட்டசபை தொகுதி வாரியாக, தனித்தனியே வைக்கப்பட்டுள்ளது.துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு மற்றும் சி.சி.டி.வி., கேமரா வாயிலாக, முழுநேரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.மாவட்ட ஸ்ட்ராங்ரூமில் தற்போது, 5,565 பேலட் யூனிட், 3,447 கன்ட்ரோல் யூனிட், 3,645 விவி.பேட் ஆகியவை இருப்பில் உள்ளன. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இருப்பு சரிபார்க்கப்படுகிறது.அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில், கலெக்டர் கிறிஸ்துராஜ் ஸ்ட்ராங் ரூமை திறந்தார். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இருப்பு விவரங்கள், இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வுக்குப்பின், ஸ்ட்ராங் ரூம் மீண்டும் பூட்டப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜெயராமன், தாசில்தார் (தேர்தல்) தங்கவேல் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர். - நமது நிருபர் -
18-Mar-2025