பணி பதிவேடு பராமரிப்பதில் குளறுபடி கிராம உதவியாளர் சங்கம் அதிருப்தி
உடுமலை : ஊழியர்களின் பணி பதிவேட்டை அதிகாரிகளே பராமரிக்க வேண்டும், என கிராம உதவியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.உடுமலை தாலுகா அலுவலகத்தில், பணியாற்றும் ஊழியர்களின் பணிப்பதிவேட்டினை ( எஸ்.ஆர்.,) ஆன் லைன் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனை பராமரிக்கவும், ஊழியர்களின் விபரங்களை பதிவேற்றம் செய்ய, தனியாக இளநிலை உதவியாளர் நிலையில், அலுவலர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முறையாக பணி மேற்கொள்வதில்லை.இப்பணிப்பதிவேடு என்பது ஒரு ஊழியரின் ஊதிய உயர்வு, பதவி உயர்வு, தண்டனை, விடுப்பு விபரங்கள், பணியிட மாற்றம், அசையும், அசையா சொத்து விபரங்கள் என அனைத்து தகவல்களும் உள்ள நிலையில், குறைந்த கல்வித்தகுதி உள்ள கிராம உதவியாளர்களே பூர்த்தி செய்ய வேண்டும், என கட்டாயப்படுத்தப்படுகிறது.இதனை அதிகாரிகள் பராமரிக்க வேண்டிய நிலையில், ஊழியர்களே பூர்த்தி செய்ய வலியுறுத்துவதால், பல முக்கிய தகவல்கள், தண்டனை விபரங்கள், விடுப்பு விபரங்கள் மறைக்கப்படலாம்.மேலும், பல பதிவுகள் மற்றும் அதிகாரிகள் கையொப்பம் விடுபட்டு உள்ளதை, சரிபார்த்து திருத்தம் செய்து மேற்படி பணியினை உரிய அலுவலர்களை வைத்து சரிபார்த்து ஆன்லைன் பதிவேற்றம் செய்திட வேண்டும், என கிராம உதவியாளகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.