கிராம உதவியாளர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியால் பரபரப்பு
உடுமலை; உடுமலை தாலுகா முக்கூடு ஜல்லிபட்டி கிராமத்தில், கிராம உதவியாளராக பணியாற்றி வந்தவர் திலீப்,35. சமூக வலைதளத்தில் ஒரு நபருடன் ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து, போலீஸ் வழக்கு பதிவு செய்ததால், கடந்த, 2024 அக்.,8 ல் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.நீதிமன்ற ஜாமின் பெற்று, உயர் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடத்தி, விளக்கம் பெற்றும், மீண்டும் பணி மற்றும் பிழைப்பு ஊதியம் வழங்கவில்லை.மீண்டும் பணி வழங்கக்கோரி, கடந்த மாதம், 11ம் தேதி, திலீப் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்; அதிகாரிகள் பணி உத்தரவு வழங்கப்படும் என உறுதியளித்தனர்.ஆனால், உறுதியளித்தபடி அதிகாரிகள் பணி நியமன உத்தரவு வழங்கவில்லை. வேதனையடைந்த கிராம உதவியாளர் திலீப், நேற்று மாலை, உடுமலை தாலுகா அலுவலகத்திற்கு வந்து, ''ஆளும்கட்சியினர், அரசியல்வாதிகள் துாண்டுதலால், அதிகாரிகள் பணி வழங்க மறுக்கின்றனர்; உடனடியாக பணி வழங்க வேண்டும்'' என கோஷம் எழுப்பியபடி, தாசில்தார் முன்பு, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து, தற்கொலைக்கு முயன்றார்.தாசில்தார் கவுரிசங்கர், டி.எஸ்.பி., நமச்சிவாயம், போலீசார் அவரை, மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போராட்டத்தால் பல மணி நேரம் பரபரப்பு நிலவியது.