உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பை கொட்ட அனுமதியோம் கிராம மக்கள் இன்று போராட்டம்

குப்பை கொட்ட அனுமதியோம் கிராம மக்கள் இன்று போராட்டம்

பல்லடம்: திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னக்காளி பாளையம் கிராமத்தில், குப்பைகளை தரம் பிரித்து, திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ள, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான, ஆரம்பகட்ட பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. இதற்கு, இடுவாய் உட்பட, சுற்றுவட்டார கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, கடையடைப்பு போராட்டம் நடத்தி, பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்த நிலையில், இன்று, காத்திருப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. போலீசார் இதற்கு அனுமதி மறுத்த நிலையில், பொதுமக்கள், இன்று காலை, 10.00 மணிக்கு சின்னக்காளிபாளையம் பகுதியில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். போராட்டக் குழுவினர் கூறியதாவது: ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை கருத்தில் கொள்ளாமல், மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. கடையடைப்பு நடத்தி எதிர்ப்பு தெரிவித்தும் மாநகராட்சி செவி சாய்க்கவில்லை. சென்னை ஐகோர்ட்டில் இது தொடர்பாக மனு தாக்கலும் செய்துள்ள நிலையில், இன்று நடக்கவுள்ள போராட்டத்தில், ஒட்டுமொத்த கிராம மக்களையும் பங்கேற்க செய்ய திட்டமிட்டுள்ளோம். மாநகராட்சியின் குப்பை கொட்டும் செயலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ