இயற்கைக்கு நன்றி சொல்ல கிராமங்களில் திருவிழாக்கோலம்! இன்று காப்பு கட்டி பொங்கல் விழா துவக்கம்
உடுமலை; பருவமழையால், நிலமெல்லாம் பசுமைக்குதிரும்பி, விளைபொருளை அறுவடை செய்து, விவசாயத்துக்கும், வாழ்வாதாரத்துக்கும் உறுதுணையாக இருந்த இயற்கைக்கு, நன்றி சொல்லும் தைத்திருநாளை, உற்சாகத்துடன் கொண்டாட உடுமலை பகுதி மக்கள் தயாராகி வருகின்றனர்.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், பிரதானமாக உள்ள விவசாயத்துக்கு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் ஆதாரமாக உள்ளன.கடந்த சீசனில், பருவமழை பொழிவு சிறப்பாக இருந்தது; அமராவதி அணை உட்பட நீர்நிலைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டது. பி.ஏ.பி., பாசனத்துக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.மழைப்பொழிவு மற்றும் அணையிலிருந்து தண்ணீர் திறப்பால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, பல ஆயிரம் ஏக்கரில், காய்கறி உள்ளிட்ட அனைத்து சாகுபடி பரப்பும் அதிகரித்துள்ளது. மண்டல பாசனத்துக்கு சாகுபடி செய்யப்பட்ட, மக்காச்சோளம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.நெல், கரும்பு, வாழை மற்றும் தென்னை என அனைத்து சாகுபடிகளும், மழையால், மாற்றம் பெற்றுள்ளன. இவ்வாறு, திரும்பிய பக்கமெல்லாம், பசுமையாக மாறி கண்களை குளிர்விக்கிறது.இவ்வாறு, விவசாயம் செழிக்க, உறுதுணையாக இருந்த இயற்கைக்கு நன்றி சொல்லும் தைத்திருநாள் கொண்டாட்டங்கள் உடுமலை பகுதியில் களைகட்டியுள்ளது. விழா கொண்டாட தயார்
பொங்கல் பண்டிகையை கொண்டாடவீடுகளில் வர்ணம் பூசி, வாசலில் கோலமிட்டு உற்சாகமாக தயாராகி வருகின்றனர்.தைத்திருநாளின் முதல் நிகழ்வாக, வீடுகளில் காப்புக்கட்டி மக்கள் வரவேற்கின்றனர். மாவிலை, ஆவாரம், பூளைப்பூ, வேப்பிலை உள்ளிட்டவற்றை கொண்டு, வீடுகளின் முகப்பிலும், விளைநிலங்களிலும், கால்நடைகளை பராமரிக்கப்படும் பட்டிகளிலும் காப்பு கட்டுகின்றனர்.பருவமழைக்கு பிறகு, ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த, விழிப்புணர்வு ஏற்படுத்த இம்முறையை பாரம்பரியமாக பின்பற்றி வருகின்றனர். காப்பு கட்டியதும், தைத்திருநாள் கொண்டாட்டங்கள் களைகட்ட துவங்கி விடும்.நாளை, இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக முதலில் சூரிய பொங்கலிட்டு, வழிபாடு செய்ய உள்ளனர். மேலும், இப்பகுதியில், பட்டி பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.விளைநிலங்களில், பட்டி கட்டி, காளை, மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை அலங்கரித்து, அவற்றின் நலனுக்காக பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர்.தைத்திருநாளை வரவேற்கும் கொண்டாட்டங்கள் உடுமலை பகுதியில் களைகட்டியுள்ளது. உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களிலும், பொங்கலையொட்டி, சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.