பஸ் ஸ்டாண்டில் விதிமீறல்: வாகன ஓட்டுநர்கள் அட்ராசிட்டி
உடுமலை; உடுமலை பஸ் ஸ்டாண்டில் போதியளவு கண்காணிப்பில்லாமல், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் விதிமீறலில் ஈடுபடுவதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.உடுமலை பஸ் ஸ்டாண்டில், நாள்தோறும், தொலை துார மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு செல்ல, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர். பயணியரை பாதிக்கும் வகையில், பஸ் ஸ்டாண்டில் பிற வாகனங்கள் வந்து செல்வதால் இடையூறு ஏற்படுகிறது. அதனால், பஸ் ஸ்டாண்டினுள் பிற வாகனங்கள் இயக்குவதற்கு நகராட்சி நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இருப்பினும், போதியளவு கண்காணிப்பு இல்லாததால், வாகனங்களை ஓட்டி செல்வது மட்டுமின்றி, பயணியர் நடந்து செல்லும் வழித்தடங்களில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.உடுமலை - பொள்ளாச்சி பைபாஸ் ரோட்டில் நுழைவதற்கு, தாராபுரம் ரோடு பிரிவு வரை சென்று திரும்ப வேண்டியுள்ளது. இந்நிலையில், சரக்கு வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் பஸ் ஸ்டாண்ட் வழியாக இயக்கப்படுகிறது. பஸ்சிற்கு காத்திருக்கும் பயணியர், இரண்டு சக்கர வாகனங்கள் செல்வதால் சிரமத்துக்குள்ளாகின்றனர்.நகராட்சி நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறையின் சார்பில் கூடுதல் கவனம் செலுத்தி, விதிமுறை மீறி வாகனங்கள் நிறுத்துவோர், வாகனம் இயக்குவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.