உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கண்ணில் ஈரம் காயும் முன்பே தொடரும் விதிமீறல்

கண்ணில் ஈரம் காயும் முன்பே தொடரும் விதிமீறல்

பல்லடம் : நேற்று முன்தினம் மதியம் 3:00 மணி; வாகன போக்குவரத்து நிறைந்த பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில், பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் நோக்கி சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் லாரி, பயங்கர சத்தத்துடன் நால்ரோட்டில் கவிழ்ந்தது.டூவீலரில் சென்றுகொண்டிருந்த பல்லடம், மகாலட்சுமி நகரை சேர்ந்த மகாராணி, 55 மற்றும் இவரது மகள் கிருத்திகா, 35 ஆகியோர் மீது கன்டெய்னர் அழுத்தியதில், இருவரும் பலியாயினர்.

மாறிய குடும்பத்தின் 'விதி'

மகாராணியின் கணவர் நாகராஜ் திருப்பூரில் சோடா கடை நடத்தி வருகிறார். கணவரை இழந்த கிருத்திகாவுக்கு15 மற்றும் 13 வயதுகளில் இரு மகன்கள் உள்ளனர். தற்போது, இரண்டு குழந்தைகளுக்கும், நாகராஜ் மட்டுமே ஆதரவு. சராசரி வாழ்க்கை நடத்தி வரும் ஒரு குடும்பத்தின் 'விதி' மாறியதற்கு விதிமீறலே காரணமாகிவிட்டது.பல்லடம் தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, கொச்சி, உடுமலை, அவினாசி, தாராபுரம் ஆகிய முக்கிய நெடுஞ்சாலைகளும் இணைகின்றன. முக்கிய தொழில் நகரமான கோவை மட்டுமன்றி, கேரளாவையும் இணைக்கும் பிரதான வழித்தடம் என்பதால், பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் கன்டெய்னர்கள், சரக்கு, டிப்பர் மற்றும் டேங்கர் லாரிகள் உள்ளிட்ட அனைத்தும் பல்லடம் வழியாகவே வந்து செல்கின்றன.

விதிமுறை மீறலேஉயிருக்கு 'எமனானது'

பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, காலை, 6:00 முதல் இரவு, 11:00 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்ற விதிமுறை கடந்த, 2022ம் ஆண்டே கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த விதிமுறை பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. அனைத்து கனரக வாகனங்களும், 24 மணி நேரமும் பல்லடம் வழியாகவே வந்து செல்கின்றன. விதிமுறை மீறி மதிய நேரத்தில் வந்த கன்டெய்னர் லாரிதான், இருவரின் உயிருக்கு எமனாக மாறியது.நால்ரோட்டில், சிக்னல் முடிவடையும் கடைசி நிமிடத்தில், கன்டெய்னர் அவசரகதியில் சிக்னலை கடந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.தாய் - மகள் இருவரும் பலியானது, பல்லடம் மக்களின் மனதில் நீங்காத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு பின்னும், விதிமுறை மீறி, 24 மணி நேரமும் கனரக வாகனங்கள் வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

கானல் நீராகவே கோரிக்கை

பல்லடத்தில், வாகன விபத்துகளால் ஏற்பட்டு வரும் உயிரிழப்பு, பொருள் சேதம் ஆகியவற்றை தவிர்க்க, மேம்பாலம் மற்றும் புறவழிச்சாலை வேண்டும் என, கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாகவே பல்லடம் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த ஆட்சிக் காலத்திலும் நிறைவேறாத திட்டங்கள், தற்போதைய ஆட்சியிலும் கானல் நீராகவே உள்ளது. இரு உயிர்களை பலி கொடுத்த பின்பாவது, ஆட்சியாளர்கள், அதிகாரிகள் இதுகுறித்து சிந்திப்பார்களா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை