உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தரிசனம் கடினம்; கரிசனம் பூஜ்ஜியம்! பக்தர்கள் தவிப்பு தொடர்கிறது அறநிலையத்துறை அலட்சியம்

தரிசனம் கடினம்; கரிசனம் பூஜ்ஜியம்! பக்தர்கள் தவிப்பு தொடர்கிறது அறநிலையத்துறை அலட்சியம்

அவிநாசி;அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்றும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். கடும் வெயிலில், தாகத்துடன் நீண்ட நேரம் காத்திருந்து தரிசிக்க வேண்டியிருந்தது; அறநிலையத்துறை எந்த அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ளாதது குறித்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது.அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம், கடந்த 2ம் தேதி கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் லட்சக்கணக்கானோர் திரண்டனர். கடும் வெயிலில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர்; குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அறநிலையத்துறையினர் செய்யவில்லை. தன்னார்வலர்கள் முயற்சியில், குடிநீர் மற்றும் தரை விரிப்புகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டன.

தரிசிக்க 5 மணி நேரம்

நேற்று முன்தினம் முதல் மண்டல பூஜை துவங்கி, 48 நாள் நடக்கிறது. கும்பாபிேஷகத்தை தொடர்ந்து, கோவிலில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலைமோதுகிறது. விடுமுறை தினமான நேற்று, ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். பக்தர்கள் வரிசை கோவில் வளாகத்தில் இருந்து வெளியேறி மங்கலம் சாலை வரை நீண்டு கொண்டே சென்றது.ஐந்து மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசிக்க வேண்டியிருந்தது. முதியவர்கள், கர்ப்பிணிகள், தாய்மார்கள், குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள் என பலரும் வெயிலால் வாடி வதங்கினர். கோவில் வளாகத்தில் நிழலுக்கு ஒதுங்க இடம் இல்லாததால், பக்தர்கள் தவித்தனர்.

திரும்பிச்சென்ற பக்தர்கள்

பலரும் சுவாமியை தரிசிக்க இயலாமல், தீபஸ்தம்பத்தில் அகல் விளக்கை ஏற்றிவிட்டு, திரும்பிச் சென்றனர். நேரம் அதிகரிக்க, அதிகரிக்க, பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் சென்றது. பலரும் சுட்டெரிக்கும் வெயிலிலும், தண்ணீர் தாகத்திலும் தவித்தனர்.தன்னார்வலர்கள் கோவிலுக்கு விரைந்து வந்து, குழாய் மூலம், தண்ணீரை பீய்ச்சியடித்து வெயிலின் தாக்கத்தை குறைத்து பக்தர்கள் வரிசையில் நின்று செல்லும் வகையில், ஒழுங்குப்படுத்தினர்.

அதிகாரிகள்இருக்கிறார்களா?

அறநிலையத்துறை, தங்களை அவமதிப்பதாக பக்தர்கள் வேதனையுற்றனர். அறநிலையத்துறையினரின் அலட்சியம், பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில், கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. புகார் தெரிவிக்க அலுவலகம் சென்றால், ''செயல் அலுவலர் வெளியில் சென்றுள்ளார்; சிறிது நேரம் கழித்து வாருங்கள்'' என்ற பதில்தான் கிடைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி