உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தீவிர திருத்த படிவம் திரும்ப கொடுக்காத வாக்காளர்கள்

 தீவிர திருத்த படிவம் திரும்ப கொடுக்காத வாக்காளர்கள்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளரிடமிருந்து பூர்த்தி செய்த படிவங்கள் வந்து சேர்வதில் கால தாமதம் ஏற்படுகிறது. இதனால், வாக்காளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், படிவங்களை பூர்த்தி செய்து பெறவும், பூத் ஏஜென்டுகளின் கூடுதல் பங்களிப்பை தேர்தல் கமிஷன் எதிர்பார்க்கிறது. மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகளில், 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 வாக்காளர்கள், பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 2,536 பி.எல்.ஓ.,க்கள், வாக்காளர் வீடு தேடிச் சென்று படிவம் வழங்கல் மற்றும் பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெறும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்காளருக்கும், தலா இரண்டு படிவங்கள் வீதம், மொத்தம் 48 லட்சத்து 89 ஆயிரத்து 858 படிவங்கள் பிரின்ட் எடுக்கப்பட்டு, அந்தந்த பி.எல்.ஓ.,க்களிடம் பிரித்து வழங்கப்பட்டிருந்தது. வாக்காளர், இரண்டு படிவத்தையும் பூர்த்தி செய்து, ஒரு படிவத்தை பி.எல்.ஓ., விடம் ஒப்படைக்க வேண்டும். மற்றொன்று படிவத்தை வாக்காளரே வைத்துக்கொள்ளலாம். கடந்த 15ம் தேதி முதல், வாக்காளரிடமிருந்து பூர்த்தி செய்த படிவங்களை பெற்று, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. மாவட்டத்தில், 60 சதவீத வாக்காளர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களை இன்னும் பூர்த்தி செய்து கொடுக்காமல் உள்ளனர். படிவங்களை பூர்த்தி செய்து திரும்ப ஒப்படைக்க, டிச. 4ம் தேதி கடைசி நாள் எனவும், இதில் கால நீட்டிப்பு செய்யப்படாது எனவும் தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், பெரும்பாலான வாக்காளர்கள், படிவம் பூர்த்தி செய்து வழங்காதது தேர்தல் பிரிவினருக்கு பெரும் தலைவலியைஏற்படுத்தியுள்ளது. படிவங்களை விரைந்து பெறுவது தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில், எட்டு சட்டசபை தொகுதி களில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்பட தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். அரசியல் கட்சியினர் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில், தீவிர திருத்த படிவம் பெற்ற வாக்காளர்களில், பெரும்பாலானோர், இன்னும் அதனை பூர்த்தி செய்து பி.எல்.ஓ.,க்களிடம் வழங்காமல் உள்ளனர். பி.எல்.ஓ.,க்களால் மட்டுமே அனைத்து படிவங்களையும் திரும்ப பெறுவது இயலாதது. ஆகவே, ஒவ்வொரு பூத் ஏஜென்டுகள் வாயிலாக (பி.எல்.ஓ., - 2), தினமும் 50 படிவங்களை, வாக்காளரிடமிருந்து பெற்று, ஒப்படைக்க வேண்டும். வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, அனைத்து கட்சி கூட்டத்தில் தேர்தல் பிரிவினர் வலியுறுத்தினர். இவ்வாறு அவர்கள் கூறினர். படிவங்களை பூர்த்தி செய்து வழங்கவில்லை அல்லது ஆன்லைனில் பதிவேற்றம் செய்யமுடியாமல் போனாலோ, வாக்காளரின் பெயர், டிச. 9ல் வெளியாகும் வரைவு பட்டியலில் இடம் பெறாது. இருப்பினும், படிவம் - 6 பூர்த்தி செய்து கொடுத்து, பட்டியலில் இணைக்க வேண்டியிருக்கும். எனவே, வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களை, உடனே பூர்த்தி செய்து, பி.எல்.ஓ.விடம் ஒப்படைக்க வேண்டும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ