உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரயில்வே சுரங்க பாலங்களில் எச்சரிக்கை குறியீடு; மழை நீர் அறிந்து கடக்க அறிவுறுத்தல்

ரயில்வே சுரங்க பாலங்களில் எச்சரிக்கை குறியீடு; மழை நீர் அறிந்து கடக்க அறிவுறுத்தல்

உடுமலை ; பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், ரயில்வே சுரங்க பாலங்களில் எச்சரிக்கை குறியீடு அமைக்கப்பட்டு வருகிறது.திண்டுக்கல் - பாலக்காடு ரயில்வே வழித்தடத்தில், உடுமலை பகுதிகளில், தளி ரோடு, பாலப்பம்பட்டி - மருள்பட்டி ரோடு, எம்.பி., நகர், சடையபாளையம் ரோடு, அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளில், ரயில்வே சுரங்க பாலங்கள் உள்ளன.கிராமங்களை இணைக்கும் வழித்தடத்தில் அமைந்துள்ள, இந்த ரயில்வே சுரங்க பாலங்களில், மழை நேரங்களில் அதிகளவு மழை நீர் தேங்கி, பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.தற்போது வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், மழை பெய்தால், பல அடி உயரத்திற்கு, வெள்ள நீர் தேங்கி வருகிறது.பாலத்தில் தேங்கியுள்ள மழை நீர் அளவு தெரியாமல், இதனை கடக்கும் வாகனங்களில் வெள்ளத்தில் சிக்கி பாதிக்கும் அபாயம் உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், தற்போது வெள்ள அபாய எச்சரிக்கை குறியீடுகள் அமைக்கப்பட்டு வருகிறது.சரிவு மற்றும் மைய ஓடுதளம் ஆழம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், 3 மீ., 5 மீட்டர், 7 மீட்டர் என, மூன்று உயரங்களில், சிவப்பு கோடு அமைக்கப்பட்டுள்ளது.வாகனங்களின் உயரம் அடிப்படையில், மையப்பகுதியில் தேங்கியுள்ள நீரீன் ஆழம் மற்றும் வேகம் குறித்து, வாகனங்கள் கடக்கும் வகையில், எச்சரிக்கை குறியீடுகள் அமைக்கப்பட்டு வருகிறது.ரயில்வே துறை அதிகாரிகள் கூறுகையில், 'மழை வெள்ள நீர் தேங்கும் அளவு குறித்து, பாலத்திற்குள் நுழையும் போதே அறிந்து கொள்ளும் வகையில் எச்சரிக்கை குறியீடு அமைக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில், பைக், கார் மற்றும் கன ரக வாகனங்கள், இதனை அறிந்து எச்சரிக்கையாக கடக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ