உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அணை பூங்காவில் குவியும் கழிவுகள்; நடவடிக்கை எடுக்கப்படுமா?

அணை பூங்காவில் குவியும் கழிவுகள்; நடவடிக்கை எடுக்கப்படுமா?

உடுமலை ; அமராவதி அணை மற்றும் பூங்கா பகுதியில், பிளாஸ்டிக் கழிவுகள் குவிவதை தவிர்க்க, பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலையிலிருந்து, 22 கி.மீ., தொலைவில், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், அமராவதி அணை பூங்கா அமைந்துள்ளது.அங்குள்ள, முதலைப்பண்ணை, படகு சவாரி மற்றும் அணை பூங்காவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். ஆனால், பூங்காவில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.புதர் மண்டி, பரிதாப நிலையில் இருக்கும் பூங்கா, மது அருந்துபவர்களுக்கு மட்டும் பயன்பட்டு வருகிறது.இவ்வாறு, பூங்காவை ஆக்கிரமிக்கும், 'குடி'மகன்கள், வீசும், காலி மதுபாட்டில்கள் அப்பகுதி முழுவதும் கிடக்கிறது. உடைந்த கண்ணாடி துகள்கள் அவ்வழியாக செல்பவர்களை காயப்படுத்துகிறது.மேலும், பூங்காவிலும், அணையை ஒட்டிய வனப்பகுதியிலும், பிளாஸ்டிக் கழிவுகள், குவிந்து வருகிறது. பூங்காவிலும், அருகிலுள்ள வனப்பகுதியிலும் எவ்வித கண்காணிப்பும் இல்லாததால், இந்த அவலம் தொடர்கதையாக உள்ளது.வனப்பகுதியில் வீசப்படும் கழிவுகளால், வனவிலங்குகளும் பாதிக்கிறது. அணையின் நீர்மட்டம் குறையும் போது, நீர் தேக்க பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணியர், பிளாஸ்டிக் பாட்டில்கள், உணவு பொட்டல கவர்களை அங்கேயே வீசி வருகின்றனர்.அவை மட்காமல், அணை நீரில் மிதக்கிறது. நுாற்றுக்கணக்கான கிராமங்களின் குடிநீர் ஆதாரமான அணை நீர் மாசுபடுவதை தடுக்க, பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பூங்கா மற்றும் இதர பகுதிகளில், குப்பைத்தொட்டி அமைப்பதுடன், எச்சரிக்கை பலகைகளும் வைக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ