உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பி.ஏ.பி., 4ம் மண்டலத்துக்கு 27ல் நீர் திறப்பு

பி.ஏ.பி., 4ம் மண்டலத்துக்கு 27ல் நீர் திறப்பு

- நமது நிருபர் - திருப்பூர் மாவட்டம், உடுமலை, திருமூர்த்தி அணையில் இருந்து, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, பாசனத்துக்கு நீர் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மண்டலத்துக்கும் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.கடந்த, 3ம் தேதியுடன் மூன்றாம் மண்டல பாசனம் நிறைவடைந்தது. இதனையடுத்து, நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறித்து, திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு கூட்டம், பொள்ளாச்சியில் உள்ள பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம், உறுப்பினர்கள், பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் கூறியதாவது:திருமூர்த்தி அணையில் இருந்து, நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. வரும், 27ம் தேதி முதல், நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. 135 நாட்களில் உரிய இடைவெளியில் ஐந்து சுற்று தண்ணீர் வழங்கவும், மொத்தம், 10,250 மில்லியன் கனஅடி நீர் வழங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால், 94,500 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். இதேபோல், முதலாம் மண்டல பாசனத்துக்கும், ஐந்து சுற்று தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். அதிகாரிகள், அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பதாகவும், அரசு உத்தரவு பெறப்பட்டதும் பாசனத்துக்கு நீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !