குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
திருப்பூர்; குழாய் உடைப்பு காரணமாக ரோட்டில் குடிநீர் பாய்ந்து வீணாகிறது. உரிய நடவடிக்கை எடுத்து ரோடு பழுதாவது தடுக்க வேண்டும்.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது குடிநீர் திட்டங்களின் கீழ் குடிநீர் சப்ளை செய்யப் படுகிறது.இத்திட்டங்களுக்கு பதிக்கப்பட்ட பிரதான குழாய்கள், வினியோக குழாய்களில் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் பெருமளவு வீணாகிறது. அது மட்டுமின்றி, ரோட்டில் பாய்ந்தும், தேங்கியும் நிற்கும் குடிநீர் ரோட்டை அரித்து சேதப்படுத்துவதும் வழக்கமாக உள்ளது.இது போன்ற குடிநீர் வீணாகும் இடங்களில் ரோடுகள் சேதாரமாவதும், தேங்கி நிற்கும் நீரை வாகனங்கள் கடந்து செல்லும் போது வாரியிறைக்கப்பட்டு மக்கள் அவதிப்படும் நிலையும் தொடர்கதையாக உள்ளது. திருப்பூர், பி.என்., ரோடு, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் நீண்ட காலமாக குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் வீணாகி வருகிறது.இதை ஊழியர்கள் சரி செய்தாலும், தொடர்ந்து உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இங்கு வெளியேறும் குடிநீர் ரோட்டில் பாய்ந்து வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு அவதியை ஏற்படுத்துகிறது.அதேபோல், பல்லடம் ரோடு, முருகம்பாளையம் பகுதியில், சர்வோதய சங்க அலுவலகம் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி வீணாகிறது. ரோட்டோரம் இந்த நீர் தேங்கி நின்று பெரும் அவதி நிலவுகிறது.குடிநீர் குழாய்களில் ஏற்படும் உடைப்புகள் குறித்து உரிய கண்காணிப்பு மேற்கொண்டு, உடனுக்குடன் சரி செய்து குடிநீர் விரயமாவதை தடுக்க வேண்டும்.ஆனால், மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், இதனை கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.