மேலும் செய்திகள்
ஓடைகள் துார்வார ஆய்வு
21-Sep-2025
உடுமலை; வட கிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், கிராமங்களிலுள்ள ஓடைகள் மற்றும்குளம், குட்டைகளை துார்வாரி மழை நீர் சேமிக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை காலங்களில் கிடைக்கும் மழைநீரை சேமிக்கும் வகையில், ஓடைகள் இயற்கையாகஅமைந்துள்ள நிலையில், அவற்றில் வரும் மழை நீரை சேமித்து, விவசாயம், குடிநீர் பயன்பாடு மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கும் வகையில், குளம், குட்டைகளும் அமைந்துள்ளன. உடுமலை ஒன்றியத்திலுள்ள, 38 ஊராட்சிகளில், 150க்கும் மேற்பட்ட மழை நீர் ஓடைகள் அமைந்துள்ளன. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்காலங்களில், மட்டும், இந்த ஓடைகளில் நீரோட்டம் இருக்கும். இந்த ஓடைகள் வழியாக செல்லும் தண்ணீர், கிராம குளங்களில், நிரம்பி, சுற்றுப்பகுதி நிலத்தடி நீர்மட்டத்துக்கு ஆதாரமாக உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மழை நீர் ஓடைகள், முறையாக பராமரிக்கப்படுவதில்லை. கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை சீசனில், பெரும்பாலான ஓடைகளில், மழை நீர் செல்ல வழியில்லாத அளவுக்கு புதர் மண்டியிருந்தது; குளங்களுக்கும் நீர்வரத்து கிடைப்பதில் பாதிப்பு உருவானது. தற்போதும், புதர் மண்டி பரிதாப நிலையில், மழை நீர் ஓடைகள் காணப்படுகின்றன.தற்போது ஓடைகள் சீமைக்கருவேலன் மரங்கள் முளைத்தும், புதர் மண்டியும் ஆபத்தான நிலையில்காணப்படுகின்றன. தடுப்பணைகளும் பாரமரிப்பின்றி, மழை நீரை சேமிக்க முடியாத அளவிற்கு, சிதிலமடைந்தும் காணப்படுகின்றன. ஓடைகள் பராமரிப்பில் உள்ளாட்சி அமைப்புகள்அலட்சியம் காரணமாக, மழை நீரை சேமிக்க முடியாததோடு, மழை காலங்களில் ஓடைகளில் நீர் வழித்தடம்மறித்து, நீர் செல்ல வழியின்றி வீடுகளுக்குள்ளும், விவசாய நிலங்களுக்குள் புகுந்தும் பெரும் வெள்ளபாதிப்புஏற்படும் அபாயமும் உள்ளது. ஓடைகளை உயிர்ப்புடன் வைத்திருந்தால், பருவமழை சீசனில் கிடைக்கும் மழை நீரை குளங்களிலும், தடுப்பணைகளிலும் தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க முடியும். ஆனால், உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியம் காரணமாக, பருவ மழையால் கிடைக்கும் நீர் சேமிக்க முடியாமல், வீணாகி வருகிறது. தற்போது, அதிக மழை பொழிவு கொடுக்கும் வட கிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. இதில் கிடைக்கும் மழை நீரை முழுமையாக சேமிக்கும் வகையிலும், ஓடைகளில் உள்ளபுதர்களை அகற்றி, வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையிலும், அனைத்து ஊராட்சிகளிலும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் சிறப்பு திட்டங்களின் கீழ், ஓடையிலுள்ள, புதர்களை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளை வலுப்படுத்த வேண்டும் என்பதே, விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்பாக உள்ளது.
21-Sep-2025