உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அறவழிப்போராட்டம் நடத்துவோம்: மாற்றுத்திறனாளிகள் எச்சரிக்கை

அறவழிப்போராட்டம் நடத்துவோம்: மாற்றுத்திறனாளிகள் எச்சரிக்கை

திருப்பூர்: 'மருத்துவ பரிசோதனை முகாமை, அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்திலேயே தொடர்ந்து நடத்துவதால், தங்கள் இன்னல் தீரவில்லை; எங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், அறவழிப்போராட்டம் மேற்கொள்வோம்' என்று மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைக்கான மருத்துவ பரிசோதனை முகாமை, கலெக்டர் அலுவலக அரங்கிலேயே நடத்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தனர். மருத்துவமனை நுழைவாயில் முதல் முகாம் அறை தொலைதுாரத்தில் உள்ளதாலும்; குடிநீர், வீல் சேர் சாய்தளம் இல்லாததாலும், சிரமம் ஏற்பட்டதால், இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் நேற்றும், மருத்துவமனையிலேயே முகாம் நடத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் புகார்களை அடுத்து, பேட்டரி வாகனம் இயக்கப்பட்டது. குடிநீர் வசதி, வீல் சேர் வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும் மிகச்சிறிய அறையிலேயே முகாம் நடத்தப்பட்டதால், கடும் இட நெருக்கடி ஏற்பட்டது. நெருக்கடியில் தவிப்பு மாற்றுத்திறனாளி மகாதேவன் கூறியதாவது: சிறிய அறையில் முகாம் நடத்தப்பட்டதால், மாற்றுத்திறனாளிகள் பலரும் இருக்கை வசதியின்றியும், நெருக்கடியிலும் பரிதவித்தனர். மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கான கழிப்பிட வசதி இல்லை. டீ, உணவு உட்கொள்ளவேண்டுமானால், மருத்துவமனை நுழைவாயில் பகுதி வரை வந்துவிட்டு, மீண்டும் முகாம் அறைக்கு செல்லவேண்டியுள்ளது. ஜெராக்ஸ் வசதி இல்லை. ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை நகல் எடுக்க தவறியோர், மெயின் ரோட்டுக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. குழப்பம்; அலைச்சல் இரண்டு வெவ்வேறு நாட்கள் முகாம் நடத்துவதால், எந்த நாள் முகாமில் தாங்கள் பங்கேற்கவேண்டும் என்பதில் மாற்றுத்திறனாளிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. நேற்று முகாமுக்கு வந்த நரம்பியல் பாதித்த பெண் ஒருவரை, வெள்ளிக்கிழமை வருமாறு திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால், அம்மாற்றுத்திறனாளிகளுக்கு வீண் அலைச்சல் ஏற்படுகிறது. நீண்ட நேரக் காத்திருப்பு கலெக்டர் அலுவலகத்தில் நடத்தும்போது, அனைத்து மருத்துவர்களும் சரியான நேரத்தில் வந்துவிடுவர். அறுவை சிகிச்சை போன்ற அவசர சூழல்களில், வேறு மருத்துவரை முகாமுக்கு அனுப்பிவைப்பர். ஆனால் முகாமில், காது மருத்துவர் காலதாமதமாகவே வந்துள்ளார்; இதனால், காது பரிசோதனைக்காக வந்த மாற்றுத்திறனாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. கலெக்டர் அலுவலக அரங்கிலேயே முகாம் நடத்த வேண்டும். எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்காத பட்சத்தில், அறவழியில் போராடவேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு, அவர் கூறினார். .

கூடுதல் அறை வசதி கேட்டுள்ளோம்

மாற்றுத்திறனாளிகள் தெரிவித்த புகார் அடிப்படையில், மருத்துவ பரிசோதனைக்காக வரும் மாற்றுத்திறனாளிகளுக்காக, மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பேட்டரி வாகனம் இயக்கப்படுகிறது; வீல் சேர், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நெரிசல் தவிர்ப்பதற்காக, மருத்துவ கல்லுாரி டீனிடம் கூடுதல் அறை வசதி கேட்டுள்ளோம். - சரவணகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி