உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வீண் சண்டைக்கு போக மாட்டோம்; வந்த சண்டையை விடமாட்டோம்

வீண் சண்டைக்கு போக மாட்டோம்; வந்த சண்டையை விடமாட்டோம்

பல்லடம்; 'நாங்கள் வீண் சண்டைக்கு போக மாட்டோம்; வந்த சண்டையை விடமாட்டோம்,' என்று, இச்சிப்பட்டி கிராமத்தில், குடிநீர் பிரச்னைக்காக ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் ஆவேசமடைந்தனர். பல்லடத்தை அடுத்த இச்சிப்பட்டி ஊராட்சியில், நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் வினியோகிக்கப்படாததை கண்டித்து, ஊர் பொதுமக்கள், நேற்று ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 'குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இங்கு வராமல் எழுந்து செல்ல மாட்டோம்,' என்று கூறி, 300க்கும் மேற்பட்ட பெண்கள், பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்திலேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் கழித்து வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், 'ஊராட்சி நிர்வாகம் வாயிலாக எழுதி கொடுத்தால் அனுமதி பெற்று கூடுதல் குடிநீர் பெற்று தருவோம்,' என்றனர். இதனை தொடர்ந்து, ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்க கேட்டு கடிதம் வழங்கியது. 'இரண்டு நாளில் எங்களுக்கு குடிநீர் வேண்டும். இப்போது செல்கிறோம். ஆனால், குடிநீர் வரவில்லை என்றால், மீண்டும் வருவோம்,' என்றவாறு, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், இச்சிப்பட்டி கிராமத்தில் நேற்று பரபரப்பு நிலவியது. அப்பகுதியினர் கூறியதாவது: அத்திக்கடவு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், சரியாக வினியோகிக்கப்பட்டு வந்த குடிநீர், கடந்த ஒன்றரை மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. வாரம் ஒரு நாள் ஒரே ஒரு குடம் குடிநீர் வருகிறது. இதை வைத்துக் கொண்டு எவ்வாறு சமாளிப்பது. விசைத்தறி கூடங்களில் எங்களை நம்பியுள்ள தொழிலாளருக்கு எவ்வாறு குடிநீர் வழங்குவது. சாப்பாடு இல்லாமல் இருந்துவிடலாம். தண்ணீர் இன்றி என்ன செய்வது? ஒரு குடம் குடிநீருடன் அதிகாரிகள் வாழ்ந்துவிட முடியுமா? நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் எங்களுக்கு வினியோகிக்க வேண்டும். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேரடியாக இங்கு வந்து எங்களுக்கு உறுதி அளிக்க வேண்டும். இதற்காக எந்தெந்த அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டுமோ அவர்களையெல்லாம் இங்கு வரச்சொல்லுங்கள். பிரச்னையை இப்போதே முடித்து விடுவோம். இல்லையெனில், இரண்டு நாள் ஆனாலும் இங்கிருந்து செல்ல மாட்டோம். நாங்கள் வீண் சண்டைக்கு போக மாட்டோம். வந்த சண்டையை விடமாட்டோம். எங்களுக்கு பழையபடி குடிநீர் வரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ