உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரசிகர் மன்றங்கள் என்ன செய்கின்றன?

ரசிகர் மன்றங்கள் என்ன செய்கின்றன?

நடிகர் அரவிந்த்சாமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ''நடிகரின் நடிப்பை ரசிப்பேன்; பின், என் வேலையைப் பார்க்க சென்றுவிடுவேன். அதைத் தாண்டி, நடிகருக்கு ரசிகராக இருக்க வேண்டியதில்லை என்பது எனது நிலைப்பாடு. ஒரு ரசிகராக இருந்தால், நடிகர் என்ன செய்தாலும் அதை ரசித்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது; அது, எனக்குப் புரியவில்லை. என் மகன், ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தில் சேரப்போகிறேன் என்று சொன்னால், வேண்டாம் என்பதுதான் எனது அறிவுரையாக இருக்கும்'' என்று கூறியுள்ளார்.'நடிப்பை ரசிக்கலாம்; ரசிகர் மன்றம் தேவையில்லை' என்ற கருத்து தொடர்பாக பிரபல நடிகர்களின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் என்ன நினைக்கின்றனர் எனக் கேட்டோம்.

உயிர் காக்கும் சேவை ரசிகர்கள் உன்னதம்

ரஞ்சித், செயலாளர், 'நல்லவனுக்கு நல்லவன்' ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம்:நடிகரின் நடிப்பில் மட்டுமல்ல; அவரது வாழ்க்கை முறையை பார்த்துத்தான், ரசிகர்கள் உருவாகின்றனர். அரசியல் கட்சியில் எந்த அடிப்படையில், தொண்டர்கள் சேர்கின்றனர்; ஒருவரை எதற்காக தலைவராக ஏற்கின்றனர்?இது, அவரவர் தனிப்பட்ட விருப்பம்; ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று, நடிகர்களும் மன்றம் அமைக்க ஒப்புதல் அளிக்கின்றனர். கடந்த, 40 ஆண்டுகளாக ரசிகர் மன்றத்தில் இருக்கிறோம்; ரசிகர் மன்றம் மூலம், கொரோனா காலத்தில் நல உதவி வழங்கினோம். குறிப்பாக, ரஜினி ரசிகர்கள் இணைந்து, 'உதிரம்' என்ற ரத்ததான அமைப்பை நடத்தி வருகிறோம்.ஏழை மக்களுக்கு, எவ்வித பாகுபாடும் பாராமல், உயிர்காக்கும் சேவையாக, ரத்ததானம் செய்து வருகிறோம். ரஜினி பிறந்த நாள், திருமண நாள் போன்ற நாட்களில், ஏழை, எளிய மக்களுக்கு, ஒரு மாதத்துக்கான மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கி வருகிறோம்.'வேட்டையன்' படம், ரஜினியின் 152வது படம்; படம் 'ரிலீஸ்' ஆகும் போது, இதுவரை இல்லாத அளவுக்கு, மிக பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளோம். *

ரசிகர் மன்ற செயல்பாடு மேம்பட்டு வருகிறது

சையது ஜாபர், மாவட்ட செயலாளர், கமல் நற்பணி மன்றம்:நற்பணி மன்றங்களை உருவாக்கியவர்கள் வயது, 45 - 50 களை நெருங்கி விட்டது; சிலருக்கு அதையும் கடந்து விட்டது. இதனால், செயல்பாடுகள் குறைந்து விட்டது; வேகம் குறைந்து, விவேகமாகியுள்ளது. அன்னதானம் வழங்குவது குறைந்து, ரத்ததானம், கண்தானம் வழங்குவது என வளர்ந்துள்ளது.ரசிகர் மன்றத்துக்கு ஆர்வமாக வருகின்றனர். செயல்பாடுகளை முன்னெடுக்க சிலருக்கு தெரிவதில்லை. சொல்லித்தருகிறோம். ரசிகர் ேஷா டிக்கெட் விற்று, அதில் வந்த தொகையைக் கொண்டு ரசிகர்கள் சேவை செய்தனர். தற்போது, ரசிகர் ேஷா டிக்கெட் தற்போது தடை செய்யப்பட்டுள்ளதால் ஒருங்கிணைந்து நிதி திரட்டி நலத்திட்டங்களை வழங்குகிறோம். தொடர்ந்து ரசிகர் மன்றங்கள் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது.டாக்டர், வக்கீல் என சமூகப்பொறுப்பில் உள்ளவர்கள் நற்பணி மன்றத்துக்குள் வராமல், செயல்பாட்டில் உள்ளவர்கள் இருந்து கொண்டு பல உதவிகளை செய்கின்றனர். நடிகர் அரவிந்த்சாமி கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. நடிகர் மேல் அபிமானம் உள்ளவர்கள்; படங்களை ரசிக்கின்றனர். ஆன்லைனில் உடனுக்குடன் முழுமையாக தெரிந்து கொள்கின்றனர். அதற்கேற்ப கருத்து பரிமாற்றம் உள்ளது; நிறைய எழுதுகின்றனர்; ரசிப்பு ஆர்வம் கூடியுள்ளது; ரசிகர் மன்ற செயல்பாடுகளும் வளர்ந்துள்ளது.--

விசில் அடித்து செல்பவர்கள் அல்ல 'மக்கள் சேவகர்கள்'தான் ரசிகர்கள்

ராஜசேகர், மாவட்ட நிர்வாகி, விஜய் மக்கள் இயக்கம்:நல்ல வழிகாட்ட, வழிநடத்த ஒருவர் உள்ளார். அவர் நடிக்கும் போதும் சரி; சொல்லும்போதும் சரி; சரியாக உள்ளது. ரசிகர் மன்றத்தை பொறுத்தவரை, வழி நடத்தும் தலைவரை பொறுத்து உள்ளது. ரசிகர் மன்றமாக இருக்கும் போதே ரத்த தானம், புத்தகம் வழங்குவது உட்பட ஏராளமான நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறோம். படம் வெளியாகும் போது, விசில் அடித்து விட்டு செல்பவர்கள் நாங்கள் இல்லை. மக்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறோம். சமீபத்தில் வெளியான படத்தின் போது மட்டுமல்ல; நாள்தோறும், வாரந்தோறும் என அனைத்து பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். இதுவரை எங்கள் தலைவர் நன்றாக வழிநடத்தி வருகிறார். வரும் காலத்திலும் மக்களுக்கு தேவையானதை செய்வோம். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

குடும்பங்களை கவனிப்பதுதான் ரசிகர்களின் முதல் பணி

கார்த்திக், அஜீத் ரசிகர், சேவூர்:ரசிகர் மன்றத்தை அஜீத் கலைத்ததற்கு ரசிகர்கள் குடும்பங்களைக் கவனிக்காமல், கட் அவுட்டுக்கு பாலாபிேஷகம், பிற நடிகர்களின் ரசிகர்களுடன் மோதல் போக்கு போன்ற தேவையற்ற செயல்களைச் செய்ததுதான் முக்கிய காரணங்களாக அமைந்தன. ரசிகர்கள் குடும்பத்தினருக்குத் தேவையானவற்றை முதலில் கவனிக்க வேண்டும் என்று அஜீத் விரும்புகிறார். அஜீத்தின் நல்ல மனதைப் புரிந்துகொண்டதால்தான், நாங்கள் இன்னும் ரசிகர்களாகத் தொடர்கிறோம். திரைத்துறை சாராமல் சாதாரண நபராக இருந்த அஜீத் இந்தளவு முன்னேறியதற்குக் காரணம், அவரது கடின உழைப்பு. இது அவருக்கு மட்டுமல்ல; எங்களுக்கும் பெருமை. அஜீத் பிறந்த நாளன்று, ஏழை, எளிய மக்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோருக்கு, ஆண்டிற்கு ஒரு நாள், மூன்று வேளையும் அறுசுவை உணவு வழங்குவதை சேவையாகச் செய்து வருகிறோம். அரவிந்த்சாமி சொன்னது அவரது கருத்து; அஜீத்தை நாங்கள் முழுமையாக ஏற்கிறோம்.----------

அதீத கொண்டாட்டம் தேவையற்றது

பரமசிவம், செயலாளர், திருப்பூர் லயன்ஸ் கிளப்:சேவை செய்வது மனப்பூர்வமான விஷயம். அதை இவர்கள் தான் செய்ய வேண்டும் என்ற வரையறை வேண்டியதில்லை. உள்ளார்ந்த உள்ளம் இருந்தால் யாரும் முன்வரலாம். நிறைய, சேவை அமைப்புகள் மக்களுக்காக இன்னமும் உருவாக வேண்டும். ரசிகர் மன்றங்கள் பொதுமக்களுக்கு, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு உதவுவதை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரம், ரசிகர் மன்றங்கள் பெயரில் புதிய படம் வெளியாகும் போது, அதீத கொண்டாட்டத்துக்கு செலவிடுவது, போஸ்டருக்கு பால் ஊற்றுவது அவசியமற்றது. உன்னத சேவையை மக்களுக்கு செய்தால், தயக்கமின்றி பாராட்டலாம்.

குடும்பம், பொருளாதாரம் பாதிக்கும்

ராஜ்குமார், நிறுவன தலைவர்,மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை, வெள்ளகோவில்:சேவை என்பது, நம்மால் முடிந்த விஷயங்களை மட்டும் தான் செய்ய முடியும். நம்மால் முடியாத செயல்களை செய்ய முடியாது. ஆனால், ரசிகர் மன்றம் என்றால், இந்த விஷயத்தை செய்ய வேண்டும் என்று மேலிடத்தில் இருந்து ஒரு உத்தரவு வரும் போது, செய்ய வேண்டிய சூழல், கட்டாயத்தில் இருப்போம். பொருளாதார ரீதியாக, வேலை, குடும்ப சூழல் பாதிக்கப்படும், அனைத்தும் மாறும். சமூக சேவை என்பது, மனிதன் பாதிக்கப்படும் போது, நம்மால் முடிந்ததை மட்டும் செய்வோம். தேவையில்லாத இடத்தில், ரசிகர் மன்றத்தில், உத்தரவுக்கு கீழ் படிந்து தேவையில்லாத இடத்தில் சேவையை பயன்படுத்துவோம். ஒரு இடத்தில் உள்ள சேவையை, சமூக அமைப்பு தான் பூர்த்தி செய்யும். ரசிகர் மன்றம் மூலம் சேவை செய்தாலும், பெரும்பாலான இடத்தில் அவை விளம்பரமாக மாறி விடுவதை பார்க்கிறோம். சேவை என்பதைத் தேடி தேடி செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ