தென்னை வாரிய நிதி என்னாச்சு? நடப்பாண்டு ஒதுக்க எதிர்பார்ப்பு
உடுமலை:வேர் வாடல் உள்ளிட்ட நோய்த்தாக்குதலால், அகற்றப்பட்ட மரங்களுக்கு மாற்றாக தென்னங்கன்று நடவு செய்ய, சீரமைப்பு நிதியை அரசு ஒதுக்க வேண்டும், என, தென்னை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. கடந்த, 2011ம் ஆண்டு முதல், பருவமழை போதியளவு பெய்யாமல், வறட்சி ஏற்பட்டது. அப்போது, மாநில அரசு, சார்பில், வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டது.கடந்த சில ஆண்டுகளாக, வெள்ளை ஈ தாக்குதல், வேர் வாடல் நோய் காரணமாக, நுாற்றுக்கணக்கான மரங்கள் பாதிக்கப்பட்டு, காய்ப்புத்திறன் இல்லாமல், பல மரங்கள், வெறுமையாக காட்சியளிக்கின்றன.இத்தகைய தென்னை மரங்களை, விவசாயிகள் வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, வாடல் நோய்த்தாக்குதலுக்கு ஆளான ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.இந்தாண்டு, தொடர் மழை காரணமாக, அனைத்து பகுதிகளிலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், தென்னை சாகுபடியை சீரமைக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.சீரமைப்பு பணிகளுக்காக, மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் நிதி ஒதுக்கீடு செய்கிறது. தற்போதைய சீசனில், இந்த நிதி கிடைத்தால், பயனுள்ளதாக இருக்கும்.குடிமங்கலம் வட்டார விவசாயிகள் கூறுகையில், 'வறட்சி மற்றும் நோய்த்தாக்குதலால், பாதிக்கப்பட்ட மரங்களுக்கு மாற்றாக, புதிதாக தென்னங்கன்று நடவு செய்தல், சொட்டு நீர் பாசனம் அமைத்தல், பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது அவசியமாகியுள்ளது.இத்தருணத்தில், தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில், வழங்கப்படும் சீரமைப்பு நிதியை, நடப்பாண்டு, மாநில அரசு பெற்று உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வாயிலாக வினியோகிக்க வேண்டும்,' என்றனர்.