அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது எப்போது? அவிநாசி வட்டார மக்கள் துயரம் தீரும் அப்போது!
அவிநாசி: அவிநாசி அரசு மருத்துவமனையில் உரிய மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள், விபத்து அவசர சிகிச்சை பிரிவு என போதிய வசதிகள் இல்லாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.அவிநாசி தாலுகாவின் தலைமை மருத்துவமனையாக, சேவூர் ரோட்டில், அரசு மருத்துவமனை உள்ளது. தினமும், 500க்கும் மேற்பட்டோர் புற நோயாளியாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதுதவிர உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இரு மாநிலங் களுக்கு இடையே இணைக்கும் மையப்புள்ளியாக அவிநாசி நகரம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை என்பதால் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து பரபரப்பாக இருக்கும். இதனால், செங்கப்பள்ளியில் இருந்து கணியூர் டோல்கேட் வரை அவ்வப்போது ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்புகளும், உடல் உறுப்புகள் இழந்து ஊனமுற்றவர்களும் ஏராளம்.அவிநாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏற்படும் விபத்துகளால் பாதிக்கப்படுவோருக்கு, அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுவதால் தொடர் உயிரிழப்புகளும், உடல் உறுப்புகளை இழந்தவர்களும் இதில் ஆயிரக்கணக்கில் அடங்குவார் இதனை கருத்தில் கொண்டு, அரசு மருத்துவ மனையை மேம்படுத்துவது குறித்து, நல்லது நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் ரவிக்குமார் மற்றும் தன்னார்வலர்கள் நீலகிரி எம்.பி., ராஜாவிடம் மனு அளித்தனர். இதனால், அவரும் போதிய வசதிகளை ஏற்படுத்தி தருமாறு, அப்போதைய சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கோரிக்கை மனு அளித்தார். அதன்பின், தி.மு.க., ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும், அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படவில்லை. நடவடிக்கை வேண்டும்
இது குறித்து நல்லது நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் ரவிக்குமார் கூறியதாவது:அவிநாசி நகர் மற்றும் கிராமப் பகுதிகள் சேர்த்து, 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.சளி, காய்ச்சல், அடிபட்ட சிகிச்சை, விபத்துகளால் ஏற்படும் காயங்கள் என அனைத்துக்கும் அவிநாசி அரசு மருத்துவ மனையே நம்பி உள்ளனர். தொடர்ந்து பத்து ஆண்டுகளாக, 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவு வசதி வேண்டும் என எம்.பி., ராஜா, எம்.எல்.ஏ., தனபால் ஆகியோரிடம் மனு அளித்துள்ளோம்.ஆனாலும், எங்களின் கோரிக்கை நிறைவேறவில்லை. எனவே, பொதுமக்களின் நன்மை கருதியும், விபத்தில் சிக்கி காயமடைந்து உயிருக்கு போராடுபவர்களை காக்கவும், அவிநாசி அரசு மருத்துவமனையில் உயிர்காக்கும் அவசர சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.