நல்லாறு துாய்மைப்பணி நிதி ஒதுக்கீடு எப்போது?
திருப்பூர்; புதர்சூழ்ந்து காணப்படும் நல்லாறை துார்வாரி சுத்தப்படுத்த, நீர்வளத்துறை சார்பில், கடந்த, 8 ஆண்டாக திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டு வருகிறது; இருப்பினும், நிதி ஒதுக்கீடில் இழுபறி நீடிக்கிறது. 'கோவை மாவட்டம், அன்னுாரில் துவங்கி அவிநாசி வழியாக, திருப்பூர் நகருக்குள் வரும் நல்லாறு, நொய்யல் ஆற்றில் கலக்கிறது. அவிநாசி, திரு முருகன்பூண்டி, திருப்பூர் மாநகராட்சி எல்லை வழியாக வரும் இந்த ஆறு, சாக்கடை கழிவுநீர் பாயும் ஓடையாக மாறியிருக்கிறது. பல இடங்களில் புதர்மண்டியும், குப்பை கழிவு நிரம்பியும் காணப்படுகிறது. 'நல்லாறை துார் வாரி சுத்தப்படுத்த வேண்டும்' என, திருமுருகன்பூண்டி மா.கம்யூ., சார்பில், கடந்த, 6 மாதங்களுக்கு முன், நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டது. மனுவிற்கு விளக்கமளித்த நீர்வளத்துறையினர், 'நல்லாறு துார்வாரும் பணி தொடர்பாக, திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது; நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் பணி துவங்கும்' எனக் கூறியிருந்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. திருமுருகன்பூண்டி நகராட்சி கவுன்சிலர் சுப்ரமணியம்(மா.கம்யூ.,) கூறியதாவது: கடந்த, 8 ஆண்டுக்கு முன் ரோட்டரி உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினரின் உதவியுடன், நல்லாறு துார்வாரும் பணி நடந்தது. அதன் பிறகு, எந்தவொரு பணியும் நடக்காததால், நல்லாறு முற்றிலும் புதர்மண்டிக் கிடக்கிறது; பூண்டியில் உள்ள நல்லாறு பாலத்தில் தான் இறைச்சிக்கழிவு, பனியன் கழிவு என அனைத்து குப்பைக்கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதனால், அப்பகுதி முழுக்க துர்நாற்றம் வீசுகிறது. எனவே, நீர்வளத்துறையினரை மட்டும் நம்பியிராமல், பூண்டி நகராட்சி நிர்வாகமும், ரோட்டரி உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினரின் உதவியுடன் நல்லாறை துார்வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; பொதுமக்கள், வியாபாரிகள், பனியன் நிறுவனத்தினர் தங்களின் கழிவுகளை கொட்டுவதை கண்காணித்து, தடுக்க வேண்டும்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாநகராட்சி எல்லையில் செல்லும் நல்லாற்றை துார்வார, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதை போன்று, பூண்டிநகராட்சியும் அத்தகைய முயற்சியை மேற்கொள்ள வேண்டும். 'நடந்தாய் வாழிக்காவிரி'
திட்டத்தில்..
.அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் துவங்கி, திருப்பூர் நெருப்பெரிச்சல் வரை, 10 கி.மீ., துாரத்துக்கு நல்லாற்றை துார் வாரி சுத்தப்படுத்த, கடந்த, 2017 முதலே, அரசுக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டும், திருத்திய திட்ட மதிப்பீடு அடிப்படையில், மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல் படி, அரசின் நடந்தாய் வாழிக்காவிரி திட்டத்தில், நல்லாற்றை துார்வாரி சுத்தப்படுத்த திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கினால் மட்டுமே பணியை துவக்க முடியும். - நீர்வளத்துறையினர்