உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இதற்கு விடிவு எப்போது? ஆபத்தான நிலையில் வசிக்கும் மலைவாழ் மக்கள்

இதற்கு விடிவு எப்போது? ஆபத்தான நிலையில் வசிக்கும் மலைவாழ் மக்கள்

உடுமலை; உடுமலை திருமூர்த்திமலையில், வீடுகள் இடிந்து விழும் நிலையில், மலைவாழ் மக்களுக்கு, சொந்தமான வீடுகளை புதிதாக கட்டித்தர வேண்டும், என வலியுறுத்தியுள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களில், 18 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன.அரசு சார்பில், மலைவாழ் மக்களுக்கு வீடுகள் கட்டித்தரும் திட்டம் நடைமுறையில் இருந்தாலும், அரசுத்துறைகள் ஒருங்கிணைப்பு இல்லாததால், மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு, அடிப்படை வசதிகள் செய்து தருவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், 110 வீடுகளில், 300க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகள், கடந்த, 1984ம் ஆண்டு, சுவர் மற்றும் தகடுகளால் ஆன மேற்கூரையால் கட்டித்தரப்பட்டது.தொடர்ந்து, இந்த வீடுகள் பராமரிப்பு குறித்து, அரசுத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

இடிந்த வீடுகள்

ஒவ்வொரு ஆண்டு மழைக்கும், வீடுகள் தொடர்ந்து இடிந்து, வருவதோடு, ஆபத்தான நிலையில், மலைவாழ் மக்கள் மற்றும் குழந்தைகள் வசித்து வருகின்றனர். கடந்தாண்டு, மழைக்கு தாங்காமல், 15க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. கடந்த வாரம் பெய்த மழைக்கு, இங்குள்ள, 10க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்ததோடு, ஒரு சில வீடுகளில் பக்கவாட்டு சுவர்கள் சேதமடைந்து, கூரைகள் சரிந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.எந்நேரமும், இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள வீடுகளை புதுப்பிக்க, நிதி ஒதுக்க வேண்டும் என, மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதே போல், குருமலை, மேல்குருமலை, பூச்சிக்கொட்டாம்பாறை உள்ளிட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில், மண் வீடுகளாக உள்ளதால், கன மழைக்கு தாங்காமல் வீடுகள் இடிந்து வருகின்றன. இவற்றையும் புதுப்பிக்க நிதி ஒதுக்க வேண்டும், என மலைவாழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நிதி ஒதுக்கவில்லை

மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைச்செயலாளர் செல்வன் கூறுகையில், ''திருமூர்த்திமலையிலுள்ள வீடுகள் முழுமையாக சிதிலமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளன. இங்கு புதிதாக வீடுகள் கட்டித்தர வேண்டும், என ஆதிதிராவிடர் நலத்துறை, வனத்துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து, மனு அளித்து வருகிறோம்.அதே போல், குருமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பில், 91 வீடுகள், மேல் குருமலை, 34, பூச்சிக்கொட்டாம்பாறை, 33 வீடுகள் என பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 5 ஆண்டுகளாகியும் நிதி ஒதுக்கவில்லை. மழை பெய்தால், மலைவாழ் மக்கள் வீடுகள் இடிந்து வரும் நிலையில், அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
டிச 19, 2024 16:01

விடிவா? பி.எம் கி சப்கோ கர் யோஜனாதான். இல்லேன்னா கலிஞர் கனவு இல்லம் கனவு காண வேண்டியதுதான்.


orange தமிழன்
டிச 19, 2024 09:58

அம்பேத்கார் எங்கள் தலைவர் என்று கூறி கொல்லும் அரசியல் வியாதிகள் எங்கே.. இந்த மலை வாழ் மக்களுக்கு உதவ எந்த அரசியலும் வர வில்லை.. சும்மா அம்பேத்கர் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை