உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகள் எப்பங்க வரும்! சரக்குகளை கையாளவும் கட்டமைப்பு தேவை

ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகள் எப்பங்க வரும்! சரக்குகளை கையாளவும் கட்டமைப்பு தேவை

உடுமலை; உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், அடிப்படை வசதிகளையும் சரக்குகளை கையாள்வதற்கான கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பயணியர் ஏமாற்றத்தில் உள்ளனர்.திண்டுக்கல் - பொள்ளாச்சி அகல ரயில்பாதை பணிகள், 2015ல் நிறைவு பெற்று உடுமலை வழியாக ரயில் போக்குவரத்து துவங்கியது. இப்பணிகளின் போது உடுமலை ரயில்வே ஸ்டேஷனும் புதுப்பிக்கப்பட்டது.ஆனால், குடிநீர், கழிப்பிடம், இருக்கை மற்றும் பிளாட்பார்ம் மேற்கூரை அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்போதியளவு இல்லைமேலும், பார்சல் சர்வீஸ் மற்றும் சரக்குகளை கையாள்வதற்கான கட்டமைப்பு வசதியும் ஏற்படுத்தப்படவில்லை.கடந்த, 2009ல், அகல ரயில்பாதை பணிகளுக்காக ரயில்சேவை நிறுத்தப்படும் வரை, உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், பார்சல் சர்வீஸ் மற்றும் சரக்கு கையாளும் வசதி இருந்தது.அகல ரயில்பாதை பணிகள் நிறைவு பெற்ற பின், மீண்டும் இத்தகைய சேவைகள் துவக்கப்படவில்லை.உடுமலை சுற்றுப்பகுதியில், விவசாயமும், அது சார்ந்த பல்வேறு தொழில்களும், அதிகளவு உள்ளன. விவசாயத்துக்கு தேவையான யூரியா உட்பட பல்வேறு உரங்கள், சென்னை மற்றும் துாத்துக்குடியிலிருந்து, பெறப்பட்டு வருகிறது.இதே போல், இப்பகுதியில், கறிக்கோழி மற்றும் முட்டை கோழி வளர்ப்பு தொழில் அதிகளவு உள்ளது.இப்பண்ணைகளுக்கு தேவையான, தீவன உற்பத்திக்கு, மக்காச்சோளம், சோயா போன்ற பொருட்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கொள்முதல் செய்யப்படுகிறது.இத்தகைய மூலப்பொருட்களை கொண்டு வருவதற்கு, அதிக செலவு செய்ய வேண்டிய நிலையில் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில், 50க்கும் மேற்பட்ட நுாற்பாலைகளும், திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில், அதிகளவு காகித ஆலைகளும் இயங்கி வருகின்றன.இந்த தொழிற்சாலைகளுக்கு, மூலப்பொருள் மற்றும் உற்பத்தி பொருள், சாலை போக்குவரத்து வழியாகவே பெறப்படுகிறது.தொழில்கள் மேம்பாட்டுக்காக, உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், பார்சல் சர்வீஸ் மற்றும் சரக்கு கையாள்வதற்கான கட்டமைப்பு வசதிகளுடனான முனையம் அமைக்கப்பட வேண்டும் என, தொடர் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.இது குறித்து, மதுரை ரயில்வே கோட்ட மேலாளருக்கு பல முறை கோரிக்கை மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

கூடுதல் வருவாய்

ரயில் பயணியர் கூறியதாவது: உடுமலை ரயில்வே ஸ்டேஷன் வாயிலாக ரயில்வேக்கு ஆண்டுதோறும் கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது. ஆனால், அடிப்படை வசதிகள் இல்லை. மேற்கூரை இல்லாததால், மழை, வெயில் காலத்தில் சிரமப்படுகிறோம்.குடிநீர் குழாய்கள் சேதமடைந்து கிடக்கிறது. குடிநீர் சுத்திகரிப்பு கருவியும் செயல்படுவதில்லை. அகல ரயில்பாதை மின்மயமாக்கப்பட்ட பிறகு, படிப்படியாக ரயில் சேவை அதிகரிக்கப்பட்டு வருகிறது.அதே போல், அடிப்படை வசதிகளையும், கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில், சரக்குகளை கையாள்வதற்கான கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Seyed Omer
ஏப் 18, 2025 13:59

முன்னாள் அமைச்சர் லல்லு பிரசாத் அறிவித்த சென்னை கன்னியாகுமரிக்கு இரட்டை வழிப்பாதை ரயில் சேவை எப்போது முடிவு பெறும் மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக மகாபலிபுரம் பாண்டிச்சேரி காரைக்கால் பட்டுக்கோட்டை கீழக்கரை ராமநாதபுரம் சாயல்குடி தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருசெந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கன்னியாகுமரிக்கு எப்போது ரயில் பாதை அமைக்கப்படும் மேலும் மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் வழியாக திருசெந்தூருக்கு ரயில் பாதை அமைக்கப்படும் காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் உள்ள அலுவலகமும் பயணிகள் வரவேற்பு அறையும் விரிசல் ஏற்பட்டுள்ளது புதிய கட்டிடம் கட்ட வேண்டும் எந்ததெந்த கோச்சுகள் எங்கு நிற்கும் என்பதை டிஜிட்டல் போர்டு வைக்க வேண்டும்


முக்கிய வீடியோ