தீபாவளி ரிலீஸ் படங்கள் எது ஜெயிக்கும்?
திருப்பூர்: தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும், சினிமாக்களுக்கும் தனி மவுசு உண்டு. அதுவும் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற 'ஸ்டார்' நடிகர்கள் நடித்த சினிமா திரைக்கு வந்தால், ரசிகர்களின் உற்சாகம் எல்லைக் கடந்து போகும். இம்முறை தீபாவளிக்கு, ஸ்டார் நட்சத்திரங்கள் படங்கள் வரவில்லை. ட்யூட் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்த 'ட்யூட்' படம் திரைக்கு வந்துள்ளது. ''படத்தின் கதை எழுதத் தொடங்கிய போதே ரஜினி சாருக்கு, 30 வயதிருந்தால் எப்படி இந்தக் கதையில் நடித்திருப்பார் என மனதில் வைத்துதான் எழுதினேன்' என கூறியிருக்கிறார், படத்தின் இயக்குனர் கீர்த்தீஸ்வரன். பைசன் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால், அமீர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கிறது பைசன். சொந்த ஊர் கபடி அணியிலேயே சேர்த்துக் கொள்ளப்படாத இளைஞன், இந்திய கபடி அணியில் இடம் பிடிக்கிறார்; இதற்காக நடக்கும் போராட்டமே கதை. கதைக்களம், தென் மாவட்டங்களை சுற்றி வருவதால், 1990களை மையப்படுத்தி படமாக்கப்பட்டிருக்கிறது. டீசல் இயக்குனர் ஷண்முகம் முத்துசாமி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், அதுல்ய ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டீசல், பெட்ரோல், கேஸ் தயாரிக்க பயன்படுத்தப்படும் கச்சா ஆயில் கடத்தலை மையமாக கொண்டது தான் கதை. 'நிஜமாக நடக்கும் பெட்ரோல், டீசல் திருட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை' என கூறியிருந்தார், படத்தின் இயக்குனர். ரசிகர்கள் வரவேற்பு சுப்ரமணியம், தலைவர், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்: தீபாவளி ரிலீஸ் படங்களில் 'ட்யூட்' அதிகம் பேசப்படுகிறது. அதற்கடுத்து, பைசன் படம்;. இரு படங்களும் முதல் நாள் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடின. டீசல் படத்துக்கான ஆதரவை ஓரிரு நாளில் கணிக்க முடியும். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், ட்யூட் சினிமா, 80 தியேட்டர்களிலும்; பைசன், 60 தியேட்டர்; டீசல், 22 தியேட்டர்களில் திரையிடப்பட்டிருக்கிறது. கதையே பேசும் ஓவியர் ஜீவா, சினிமா விமர்சகர்: ரஜினி, கமல் போன்ற நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகர்கள் நடித்த சினிமாக்கள் திரைக்கு வரும் போது, அவர்கள் மீதுள்ள ஈர்ப்பில் படம் பார்க்க செல்வர். புதுமுக நடிகர்களின் படங்கள் ரிலீஸாகும் போது, படத்தின் இயக்குனர்களுக்காக சினிமா பார்க்க செல்பவர்களே அதிகம். புதுமுக, அறிமுக நடிகர்களை தாங்கிப்பிடிப்பது இயக்குனர்களும், நல்ல கதையும் தான்.