தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல்: இயற்கை முறையில் தீர்வு காண ஆர்வம்
பொங்கலுார்: தென்னை மரங்களில், வெள்ளை ஈக்கள் தாக்குதலால் கடந்த ஆண்டு பெருமளவு காய்ப்புத் திறனை இழந்தது. வரத்து குறைந்ததை அடுத்து தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த விவசாயிகள் வேரில் மருந்து கட்டுதல், பூச்சிக்கொல்லிகளைத் தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், அதில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. வேரில் விஷம் கட்டப்பட்ட தேங்காய்களை பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. தற்பொழுது பூச்சிகளை கொல்வதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பதற்கு பல விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். தென்னை விவசாயிகள் கூறியதாவது: வேளாண்துறையினர் மஞ்சள் தார் பாலின் சீட்டுகளை மரத்தில் கட்டி அதில் விளக்கெண்ணெய், கிரீஸ் போன்றவற்றை தடவி பூச்சிகளை கவர்ந்து இழுத்து அழிக்குமாறு அறிவுரை வழங்குகின்றனர். அதனை கடைப்பிடித்து வருகிறோம். தென்னந்தோப்பை சுத்தம் செய்ய சருகுகளை போட்டு தீ மூட்டம் போடுகிறோம். இதில் கணிசமான அளவுக்கு மிளகாய்களை போட்டு எரிப்பதால், அதன் கார நெடிக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் பூச்சிகள் செத்து கீழே விழுகிறது. இந்த முறை எளிதாக உள்ளது. பூச்சிகளையும் விரட்ட முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.