உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மாணவர்கள் விளையாட்டில் ஜொலிக்க முடியாதது ஏன்?

 மாணவர்கள் விளையாட்டில் ஜொலிக்க முடியாதது ஏன்?

திருப்பூர்: ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும், நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியரின் திறமையை வெளிக்கொணரும் 'பேட்டரி டெஸ்ட்'டுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். திறமையான வீரர், வீராங்கனைளை கண்டறிய போட்டிகள் நடத்த வேண்டும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரின் விளையாட்டுத் திறமையை அடையாளம் கண்டு மேம்படுத்த, அவர்களுக்குள் மறைந்திருக்கும் திறன்களை ஊக்குவிக்க திறனாய்வு தேர்வு போட்டி (பேட்டரி டெஸ்ட்) பள்ளி கல்வித்துறையால் நடத்தப்படுகிறது. பள்ளி அளவில் கோலோச்சும் வீரர்களுக்கு மாவட்ட மற்றும் மண்டல போட்டி நடத்தப்படும். இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு, 6,000 ரூபாய் உதவித்தொகை, விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெறும் வசதியை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்படுத்தித்தரும். இதனால், மாவட்ட அளவில் ஜூனியர் நிலையிலேயே சிறந்த வீரர்கள் உருவாகினர். கடந்த, 2021க்கு பின் திறனாய்வு திறன் போட்டி, பெரும்பாலான மாவட்டங்களில் நடக்கவில்லை. அதே நேரம், பள்ளிக்கல்வித்துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் மாணவர், மாணவியர் விபரம் சேகரிக்கப்பட்டு, விபரங்கள் தொகுக்கப்படுகிறது. ஆனால், எஸ்.டி.ஏ.டி., (விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்) மூலம் மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டி நான்கு ஆண்டுகளாக நடத்தப்படவே இல்லை.மாவட்ட விளையாட்டுப்பிரிவு அதிகாரிகள்,'நிதி ஒதுக்கீடு இல்லாமல் நாங்கள் என்ன செய்ய முடியும்,' என தெரிவிக்கின்றனர். மாநிலம் முழுதும் நிதி ஒதுக்கீடு இல்லாததால், நடுநிலைப்பள்ளி அளவில் கண்டறிந்து, ஊக்கப்படுத்த வேண்டிய ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியரின் திறமை பள்ளி அளவிலேயே முற்றுப்பெற்று விடுகிறது. இதனால், உயரம், உடல் எடையைத் தாண்டிய வேகம், நிலைப்புத்தன்மை, வலிமை, நீண்டநேரம் சக்தியை செலவிடுதல், உடலியக்க மாறுபாடு ஆகிய திறமை இருந்தும், 50 மீ. வேக ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், திரும்பி ஓடுதல், 600, 800 மீ.ஓட்டப்போட்டிகளில் சிறந்த வீரர், வீராங்கனைகள் உருவாகாமல் போகின்றனர். அதிகாரிகள் சொல்வதென்ன?: மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் கூறுகையில்,'தேர்வுகள் முடிந்த கையோடு, மாவட்ட அளவில் பேட்டரி டெஸ்ட் நடத்தப்படும். இம்மாத இறுதிக்குள் பதிவேற்றம் செய்து, அப்டேட் செய்யப்படும். போட்டிகள் நடத்துவது குறித்து எஸ்.டி.ஏ.டி., அதிகாரிகள் அறிவிப்பு வெளியிடுவர்,' என்றார்.மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமாரிடம் கேட்ட போது,' பேட்டரி டெஸ்ட்' திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது; இப்போது இல்லை,' என, பதிலளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை