உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கடைசி வரிசையில் இடம் ஒதுக்கியது ஏன்? மேயரிடம் பத்திரிகையாளர் கேள்வி

கடைசி வரிசையில் இடம் ஒதுக்கியது ஏன்? மேயரிடம் பத்திரிகையாளர் கேள்வி

கடந்த, 2008ல், திருப்பூர் மாநகராட்சி உருவாகிய நாள் முதல் 16 ஆண்டுகளாக நடந்து வந்த அனைத்து மாநகராட்சி கூட்டங்களிலும், பத்திரிகையாளர்களுக்கு கவுன்சிலர் இருக்கைகளுக்கு அருகே, கூட்ட அரங்கின் இடதுபுறம் இடம் ஒதுக்கப்படும். ஆனால், நேற்று நடந்த கூட்டத்தில், அவ்விடத்தில் இருந்த இருக்கைகள் அகற்றப்பட்டிருந்தன.' உங்களுக்கு பின்புறம் கடைசி வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது,' என அங்கு நிற்க விடாமல் , பத்திரிகையாளர்களை, ஊழியர் ஒருவர் அனுப்பி வைத்தார். இதற்கு முன் பார்வையாளர் அறையாக இருந்த இடத்தில், ' பத்திரிகையாளர்கள் - புகை பிடிக்காதீர் ' என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.இதனால், கோபமடைந்த பத்திரிகையாளர்கள், மேயரிடம் முறையிட சென்றனர்; மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் மற்றும் சில கவுன்சிலர்கள் அறையில் இருந்தனர்.'இதுவரை இல்லாத வகையில் இருக்கை ஒதுக்குவதில் திடீர் மாற்றம் கொண்டு வந்திருக்கிறீர்கள்; மேயர், கவுன்சிலர் என்ன பேசுகிறார்; என்ன விவாதம் நடக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்வது?' என கேள்வி எழுப்பினர்.பதிலளித்த மேயர், 'இடபற்றாக்குறை உள்ளது; ஆகையால், தவிர்க்க முடியாததால் இடமாற்றம் செய்துள்ளோம்,' என்றார். பின்,' பத்திரிகையாளர்கள் புகைபிடித்து விட்டு மாமன்றத்துக்கு வருவதாக, பெண் கவுன்சிலர்கள் சிலர் எழுத்து பூர்வமாக புகார் தெரிவித்துள்ளனர். எனவே, உங்களுக்கு கொஞ்சம் தள்ளி, இடம் ஒதுக்கப்பட்டுள்ளது,' என்றார்.'பத்திரிகையாளர் புகை பிடிக்காதீர்' என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது கண்டிக்கதக்கது. பொத்தம் பொதுவாக அனைவரையும் குற்றச்சாட்டக்கூடாது என மேயரிடம் பத்திரிகையாளர்கள் தெரிவிக்க, தனது உதவியாளரை அழைத்த மேயர்,' என்னை கேட்காமல் யார் இப்படியெல்லாம் ஸ்டிக்கர் ஓட்டியது. ஏ.சி., சொன்னா செஞ்சிருவீங்களா. யார் சொன்னார்? அவரை வந்து பதில் சொல்ல சொல்லுங்க; அந்த ஸ்டிக்கரை முதலில் கிழித்தெறியுங்கள்,' என, சத்தம்போட்டார்.உடனே சென்ற உதவியாளர் 'புகை பிடிக்காதீர்' ஸ்டிக்கரை கிழித்து வந்தார்.''இன்று ஒரு நாள் இடம் மாறி அமருங்கள்; அடுத்த கூட்டத்துக்குள் இதற்கு தீர்வு ஏற்பாடு செய்யப்படும் என சொன்ன மேயர், அதன் பின் கூட்ட அரங்குக்குள் வந்தார். உடன் இருந்த கமிஷனர் பவன்குமார், ஒரு வார்த்தை கூட பேசாமல் அனைத்தையும் 'அமைதியுடன்' பார்த்து கொண்டிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ