இன்னொரு மகத்தான வெற்றி வசமாகுமா?
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, 'பார்டர் - கவாஸ்கர் டிராபி' ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி, 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி., அணியை வீழ்த்தியது.இரண்டாவது டெஸ்ட், அடிலெய்டில் இன்று பகலிரவு ஆட்டமாக துவங்குகிறது. 'பிங்க்' நிற பந்தில் நடைபெற உள்ள இப்போட்டியில் இந்தியா இன்னொரு மகத்தான வெற்றியைச் சுவைக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 'நம்ம ஊரு' ரசிகர்களின் பேட்டிகள்: பேட்டிங் சிறந்தால் வெற்றி நெருங்கும்
பாலசரவணன், விஜயாபுரம்: பகலிரவு போட்டி, 'பிங்க்' நிற பந்து என்பதால், இரண்டு அணிகளுக்கும் இது கடினமான போட்டியாகத்தான் இருக்கும். துவக்கம் முதலே பேட்டிங் சிறப்பாக செய்யும் அணி, வெற்றியை முதலில் நெருங்கலாம். 'பிங்க்' நிறப் பந்து சுழலும் என்பதால், போட்டி வேகம் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் கைகளில் தான் இருக்கும். அதே நேரம், ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் என்பதால், இந்தப் போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியம். நிச்சயம் இந்த போட்டி நான்கு நாட்கள் வரை நடக்கும் என நம்பலாம். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் கவனம்
கவுரிசங்கர், கணக்கம்பாளையம்: 'டாஸ்' வென்று, பேட்டிங் தேர்வு செய்து, கோலி, சுப்மன் கில், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் சிறப்பாக பேட்டிங் செய்தால், நாள் முழுதும் ஆட்டத்தை நம் வசமாக்கிக் கொள்ளலாம்; அதிக ஸ்கோர் செய்ய வாய்ப்புள்ளது. துவக்கத்தில் அதிக ஸ்கோர் செய்து விட்டால், பந்து வீச்சை சிறப்பாக செய்யலாம். பந்துவீச்சில் அசத்தினால், வெற்றி நிச்சயம். பகலிரவு போட்டி ஈரப்பதம் அதிகமாக இருக்கும். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். தலைமை பயிற்சியாளர் காம்பீர் அணிக்கு திரும்புவது கூடுதல் பலம். வெற்றி பெற்றால் தொடரே எளிது
அழகர், புதுக்காடு: ஜெய்ஸ்வால் முழு பார்மில் இருக்கிறார். கோலி இழந்த பார்மில் இருந்து மீண்டுள்ளார். புதிதாக இரண்டு பேட்டர்கள் வர உள்ளனர். ரோஹித் சர்மா, மிடில் ஆர்டர் அல்லது ஓபனிங் இறங்கினால், பேட்டிங் ஆர்டரில் மாற்றம் வரும்.ஆல்ரவுண்டர் அஸ்வின் வந்தால், சிறப்பாக இருக்கும். பகலிரவு போட்டி, 'பிங்க்' நிற பந்து என்பதால்,'ஸ்விங்' ஆக அதிக வாய்ப்புள்ளது; இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்று விட்டால், தொடரே எளிதாகி விடும்; எனவே, கவனமாக விளையாட வேண்டும்.