தென்னை சீரமைப்பு நிதி கிடைக்குமா? காத்திருக்கும் விவசாயிகள்
உடுமலை: நோய்த்தாக்குதலால் பாதித்து, அகற்றப்பட்ட தென்னை மரங்களுக்கு மாற்றாக தென்னங்கன்றுகள் நடவு செய்ய, தென்னை வளர்ச்சி வாரியத்தின் உதவியை உடுமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், 60 லட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள், நீண்ட கால பயிராக பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த, 2011ல், பருவமழை போதியளவு பெய்யாமல், வறட்சி ஏற்பட்டது.தென்னை சாகுபடியில், தண்ணீரின்றி ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் கருகின; அப்போது, மாநில அரசு, திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கியது.கடந்த சில ஆண்டுகளாக, வெள்ளை ஈ தாக்குதல், கேரளா வாடல் உட்பட நோய்த்தாக்குதல் காரணமாக, ஆயிரக்கணக்கான மரங்கள் பாதிக்கப்பட்டன.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில், காய்ப்புத்திறன் இல்லாமல், பல மரங்கள், வெறுமையாக காட்சியளிக்கின்றன.இத்தகைய தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தக்கூட வழியில்லாமல், விவசாயிகள் திகைத்து வருகின்றனர். இந்தாண்டு, பரவலாக பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை, பி.ஏ.பி., மற்றும் அமராவதி பாசனங்களை அடிப்படையாகக்கொண்டு, தென்னை சாகுபடியை சீரமைக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.சீரமைப்பு பணிகளுக்காக, மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இந்த நிதி கிடைத்தால், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.விவசாயிகள் கூறியதாவது: தொழிலாளர் பற்றாக்குறை, நிலத்தடி நீர்மட்டம் குறைவு ஆகிய காரணங்களால், தென்னை சாகுபடியிலிருந்து மாற்று சாகுபடிக்கு செல்ல முடியவில்லை. வறட்சியால், பாதிக்கப்பட்ட மரங்களுக்கு மாற்றாக, புதிதாக தென்னங்கன்றுகளை நடவு செய்தல், சொட்டு நீர் பாசனம் அமைத்தல், பராமரிப்பு ஆகியவற்றுக்கு, தென்னை வளர்ச்சி வாரியம், சார்பில், வழங்கப்படும் சீரமைப்பு நிதியை மாநில அரசு பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.