பஞ்சு இறக்குமதி வரி ரத்தாகுமா? பனியன் உற்பத்தியாளர் எதிர்பார்ப்பு
திருப்பூர்; தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க தலைவர் ஈஸ்வரன் அறிக்கை:நடப்பு ஆண்டு நமது நாட்டில் பருத்தி விளைச்சல் குறைவாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டு தேவைக்கே பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பஞ்சுக்கு, மத்திய அரசு, 11 சதவீதம் வரி விதிக்கிறது.ஏற்கனவே மற்ற நாடுகளைவிட, நமது நாட்டில் பஞ்சு விலை, 10 முதல் 12 சதவீதம் அதிகமாக உள்ளது. இறக்குமதி செய்தால் வரி என்கிற நிலையால், இந்திய ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்படும்.பிற நாட்டு ஏற்றுமதியாளர்களுடன் போட்டியிட்டு, நமது ஆடைகளை சந்தைப்படுத்துவது கடின மாகிவிடும். இதனால், நாட்டின் ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும். உள்நாட்டு சந்தைக்கான ஆடை தயாரிப்பாளர்களும் பாதிக்கப்படுவர்.பின்னலாடை மட்டுமின்றி ஜவுளித்துறை சார்ந்த, விசைத்தறி தொழிலும் பாதிக்கப்படும். ஆயிரக்கணக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்களும், அவற்றில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்படுவர்.இதையெல்லாம் கருத்தில் கொண்டு, மத்திய அரசு, பஞ்சு இறக்குமதிக்கான 11 சதவீத வரியை முழுமையாக நீக்க வேண்டும்.ஆர்டர் வழங்கி மூன்று மாதங்களுக்குப் பின்னரே இறக்குமதி பஞ்சு, நுாற்பாலைகளை வந்தடையும். எனவே, மத்திய அரசு விரைந்து முடிவெடுத்து, பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்து, ஜவுளித்துறையை பாதுகாக்க வேண்டும்.