கீரை விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை அரசு கவனிக்குமா? கூட்டுறவு கொள்முதல் மையம் அமைக்க காத்திருப்பு
உடுமலை; ஆண்டு முழுவதும் கீரை உற்பத்தி செய்து அசத்தி வரும் கிளுவங்காட்டூர் கிராம விவசாயிகள், கூட்டுறவு முறையில் உற்பத்தியாளர் நிறுவனம் துவக்கி, கொள்முதல் மையமும் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், பல ஆயிரம் ஏக்கரில், கிணற்றுப்பாசனத்துக்கு காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதில், கீரை வகைகளை மட்டுமே உற்பத்தி செய்து கிளுவங்காட்டூர் கிராமம் தனித்துவம் பெற்று வருகிறது.கீரை கிராமம் என அழைக்கப்படும் இப்பகுதியில், ஆண்டு முழுவதும், கீரை வகைகள் சாகுபடி செய்யப்படுகிறது. சிறுகீரை, அரைக்கீரை, மணத்தக்காளி, வெந்தய கீரை, தண்டு கீரை, பாலக்கீரை, பொன்னாங்கன்னி உள்ளிட்ட கீரைகள் இங்கு அதிகமாக உற்பத்தியாகிறது.விளைநிலத்தை பாத்தியாக பிரித்து, சுழற்சி முறையில் சாகுபடி செய்வதால், அனைத்து சீசன்களிலும் கீரை உற்பத்தியாகிறது.இக்கிராமத்தின் கீரை, உடுமலை உழவர் சந்தை வர்த்தகத்தில், முக்கிய பங்கு வகித்து வந்தது. இந்நிலையில், விவசாயிகளிடமிருந்து கீரையை நேரடியாக கொள்முதல் செய்யும் வகையில், பல நிறுவனத்தினர், தங்கள் கொள்முதல் மையங்களை, கிளுவங்காட்டூர் கிராமத்திலும், சுற்றுப்பகுதியிலும் அமைத்துள்ளனர்.விவசாயிகளிடம் இருந்து கீரை கொள்முதல் செய்து 'பேக்கிங்' செய்து, இங்கிருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு கீரை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.இவ்வாறு, மக்களுக்கு பல்வேறு நலன் கொடுக்கும் கீரை உற்பத்தி செய்யும் விவசாயிகள், தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கீரை உற்பத்தியாளர் குழு
விவசாயிகள் கூறியதாவது: கிளுவங்காட்டூர் பகுதியில், பெரும்பாலும், சிறு, குறு விவசாயிகளே கீரை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். விலை வீழ்ச்சி காலங்களில், விதை மற்றும் இடுபொருட்கள் வாங்க சிரமப்படுகின்றனர்.முன்பு உழவர் சந்தைக்கு, விற்பனைக்காக கீரை கொண்டு சென்றோம். தற்போது, எங்கள் பகுதியிலேயே தனியார் நிறுவனங்கள், கீரையை கொள்முதல் செய்து கொள்கின்றனர். இருப்பினும், விலை நிர்ணயிப்பதில் சில குளறுபடிகள் ஏற்படுகிறது.சிண்டிகேட் அமைத்து விலையை குறைத்தால், பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, தமிழக அரசு வேளாண் விற்பனை வாரியம் வாயிலாக, கீரை உற்பத்தியாளர் குழுவை ஏற்படுத்த வேண்டும்.அக்குழு வாயிலாக, இடுபொருட்கள் வழங்குவதுடன், கொள்முதல் மையமும் அமைக்க வேண்டும். இதனால், ஆண்டு முழுவதும் கீரைக்கு நிலையான விலை கிடைக்கும். கூட்டுறவு முறையில், குழு இயங்குவதால், அனைத்து தரப்பினரும் பயன்பெறுவார்கள்.விவசாயிகளுக்கும் நிலையான விலை கிடைக்கும்; நுகர்வோருக்கும் பாதிப்பில்லாத வகையில், விலை நிர்ணயிக்க முடியும்.இது குறித்து நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வாயிலாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.