உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவலம் என்று தீருமோ?; வியாபாரிகள் ஆதங்கம்

அவலம் என்று தீருமோ?; வியாபாரிகள் ஆதங்கம்

பல்லடம்; அதிகாரிகள் மாறியும் அவலம் தீரவில்லை என, பல்லடம் நகராட்சி கமிஷனரை சந்தித்த வணிகர்கள் தங்களது புலம்பலை வெளிப்படுத்தினர். பல்லடம் நகராட்சி, கடைவீதி பகுதியில், வியாபாரிகள் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி, சமீபத்தில், வியாபாரிகள் கடையடைப்பு நடத்தினர். கோரிக்கையை வலியுறுத்தி, நகராட்சி கமிஷனரை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட நகராட்சி கமிஷனர் அருள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். வியாபாரிகள் கூறியதாவது: பல்லடத்தில் முக்கிய வணிகப்பகுதியாக என்.ஜி.ஆர். ரோடு உள்ளது. நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வணிக வளாகங்கள் உட்பட, தனியார் வணிக வளாகங்கள், என, 450க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவற்றுக்கு, பல ஆயிரம் ரூபாய் வாடகை செலுத்தி கடைகள் நடத்தி வரும் வியாபாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், நடைபாதை கடைகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. ரோட்டை ஆக்கிரமித்து அமைக்கப்படும் நடைபாதை கடைகளால், நாங்கள் மட்டுமன்றி பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும், ஆயிரக்கணக்கான வியாபாரிகள் பொதுமக்கள் கூடும் கடைவீதி பகுதியில், குடிநீர், கழிப்பிட வசதி கிடையாது. இப்பிரச்னைகள் தொடர்பாக, பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். நகராட்சிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரும், போலீஸ் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்தினரும் மாறிமாறி குற்றம் சுமத்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். பல அதிகாரிகள் மாறியும் அவலம் தீரவில்லை. வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்காத வகையில், ரோட்டை ஆக்கிரமிக்கும் நடைபாதை கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும். கடைவீதி பகுதியில், குடிநீர் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால், வாகனங்கள் நிறுத்த தேவையான பார்க்கிங் வசதியை செய்து தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை