மேலும் செய்திகள்
சொத்து வரி உயர்வு ரத்து; வியாபாரிகள் வேண்டுகோள்
03-Jan-2025
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வுக்கு, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை, மறியல் போராட்டம் நடத்தினர். கம்யூ., காங்., கவுன்சிலர்களும் மறியல் நடத்தினர். அதன்பின், அரசியல் கட்சிகள், வியாபாரிகள் சங்கம் என உண்ணாவிரதம், கடையடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இப்பிரச்னை குறித்து விவாதிக்க, நேற்று முன்தினம் மாலை மேயர் தினேஷ்குமார் தலைமையில், துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் ராமமூர்த்தி மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டம் குறித்து, மாநகராட்சி எதிர்க்கட்சி குழு தலைவர் (அ.தி.மு.க.,)அன்பகம் திருப்பதி கூறியதாவது:தற்போது உயர்த்தியுள்ள சொத்துவரியை ரத்து செய்ய வேண்டும். ஆண்டுதோறும், 6 சதவீதம் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். இதுகுறித்து மாநகராட்சி கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும், அனைத்து கவுன்சிலர்களின் ஒப்புதலோடு இதனை அரசுக்கு அனுப்ப வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டது. அனைத்து கட்சி கவுன்சிலர்களும் இதனை ஏற்றுக் கொண்டனர்.இது குறித்து அரசு வழிகாட்டுதல் படி நடவடிக்கை எடுக்கப்படும், துறைரீதியாக உயர் அதிகாரிகள் கருத்தைப் பெற்று தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்கலாம் என்று மேயர் தெரிவித்தார்.இவ்வாறு அவர் கூறினார்.மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:பிற மாநகராட்சிகளுடன் ஒப்பிடுகையில், இந்த வரி வசூலில் மிகவும் பின்தங்கியுள்ளோம். உரிய வரி வசூல், குறிப்பிட்ட வளர்ச்சி விகிதம் எட்டாவிட்டால் மத்திய நிதிக்குழு மானியம் பெற இயலாது.பல்வேறு மறு சீராய்வு மேற்கொண்டதால், விடுபட்ட கட்டடங்கள், குறைந்த வரிவிதிப்பு போன்ற கட்டடங்கள் கண்டறிந்து அவற்றுக்கு புதிய மற்றும் நிர்ணயித்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் உள்ள சொத்து வரிவிதிப்புகளில், 1.5 சதவீத வரி விதிப்புகளுக்கு மட்டுமே இந்த வரி உயர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதுதவிர எவற்றின் அடிப்படையில் வரியினங்களை குறைக்க வாய்ப்பு உள்ளதோ அவ்வகையில் அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டுக்கு முன்னதாக சாதகமான அறிவிப்பை எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
03-Jan-2025