உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நெல் கொள்முதல் மையம் விரைவில் திறக்கப்படுமா?

நெல் கொள்முதல் மையம் விரைவில் திறக்கப்படுமா?

திருப்பூர்; அமராவதி அணை வாயிலாக, பழைய ஆயக்கட்டு ராஜவாய்க்கால் பாசனத்திலுள்ள, 7,520 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்த ஜூன் 7ம் தேதி நீர் திறக்கப்பட்டது. விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு, நாற்றங்கால் முறை, பாய் நாற்றங்கால் முறைகளில், நெல் நடவு செய்தனர். தற்போது, இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் அறுவடைக்கு தயாராகியுள்ளது. 'அறுவடைக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் விலை சரிவால் விவசாயிகள் பாதிப்பதை தடுக்கும் வகையில், அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களை உடனடியாக திறக்கவும், கட்டுப்பாடுகள் இல்லாமல் கொள்முதல்செய்ய வேண்டும்' என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். செலவு அதிகரிப்பு விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஆண்டை காட்டிலும், தொழிலாளர்கள், டிராக்டர் உள்ளிட்டவற்றுக்கான கூலி அதிகரித்துள்ள நிலையில், உரம், மருந்து என இடு பொருட்களின் விலையும் அதிகரித்துள் ளது. பூச்சி நோய், இலைக்கருகல் என ஒரு சில பகுதிகளில் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. வழக்கத்தை காட்டிலும் நடப்பாண்டு, ஏக்கருக்கு, 45 ஆயிரம் ரூபாய் வரை சாகுபடி செலவு ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு, அறுவடைக்கு இயந்திரம் கிடைக்காமல், பதிவு செய்து ஒரு மாதம் வரை விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள், தேவையான நெல் அறுவடை இயந் திரங்களை தருவிக்கவும், தடையில்லாமல் அறுவடை பணி நடக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இயந்திரங்கள் தேவை தற்போது, வட கிழக்கு பருவ மழையும் துவங்க உள்ளதால், மழை காரணமாக நெற் பயிர்கள் பாதிப்பதை தடுக்க, தேவையான அறுவடை இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதே போல், அறுவடை துவங்கி, வரத்து அதிகரித்து, நெல் விலை சரிவை தடுக்கும் வகையில், அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களை தேவையான இடங்களில் உடனடியாக துவக்க வேண்டும். நடப்பாண்டு, கூடுதல் மையங்களை திறக்கவும், விவசாயிகளிடம் ஈரப்பதம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இல்லாமல், அனைத்து விவசாயிகளிடமும் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். மையங்களில் தேவையான பணியாளர்கள், அலுவலர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ